
புது தில்லி: நாட்றம்பள்ளியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் தனது பிரார்த்தனையை முன்வைத்துள்ளார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் திங்கள்கிழமை அதிகாலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியவில் வேன் பஞ்சராகி நடுசாலையில் நின்றது.
இதையும் படிக்க.. இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்
இதனையடுத்து வேன் ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில் வேனில் இருந்தவர்கள் இறங்கி, சாலைக்கு நடுவே உள்ள சென்டர் மீடியத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அதே சாலையில் வேகமாக வந்த மினி லாரி பஞ்சராகி நின்றுக் கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் பஞ்சராகி இருந்த வேன் சாலையில் நடுவே சென்டர் மீடியத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்கள் மீது மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இவ்விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூன்று பேரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா (வயது 50), தெய்வானை (வயது 32), சேட்டுயம்மாள் (வயது 50), தேவகி(வயது 50), சாவித்திரி (வயது 42), கலாவதி (வயது50), கீதாஞ்சலி (வயது32) என்பது தெரியவந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...