இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்

இந்தியாவில் மனித உரிமைகளை மதிப்பது, பத்திரிகை சுதந்திரம் குறித்து புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன்
பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன்

இந்தியாவில் மனித உரிமைகளை மதிப்பது, பத்திரிகை சுதந்திரம் குறித்து புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததும், புது தில்லியிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வியத்நாம் பயணத்தை மேற்கொண்டார்.

வியத்நாம் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 'மனித உரிமைகளை மதிப்பது' மற்றும் 'பத்திரிக்கை சுதந்திரம்' போன்ற பிரச்னைகள் குறித்து தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஏராளமான மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து போர்க்கொடி எழுப்பி அது குறித்து ஜோ பைடன் பேச வலியுறுத்தியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தகவலை வெளியிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில், பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர்  ஜோ பைடனும் அரிதிலும் அரிதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வின்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய, இந்தியாவில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை குறிவைத்து, ஆளும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமரிசித்திருந்தனர். இந்த செயலுக்கு, வெள்ளை மாளிகை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, ஜனநாயகக் கொள்கைளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், செப்டம்பர் 8ஆம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்தளித்திருந்தார்.

"நான் எப்போதும் செய்வது போல், மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொதுச் சமூகம் மற்றும் சுதந்திரமான பத்திரிகைகளின் முக்கிய பங்கையும் மோடியிடம் நான் உணர்த்தினேன்" என்று வியத்நாமில் ஜோ பிடன் கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பிடன் இடையேயான சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகள் குறித்த விவாதம் குறிப்பிடப்படுவதை மத்திய  அரசு தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - அமெரிக்கா இடையே ஒருங்கிணைந்த உலக கூட்டணிக் கொள்கைகளை பலப்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நோக்கத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும், பகிரப்பட்ட ஜனநாயக மதிப்பீடுகள், ஒருங்கிணைப்புக்கான அடிப்படைகள், மக்களுடன் மக்களை ஒருங்கிணைக்கும் முடிச்சுகள் பற்றி பேசப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com