
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (14-9-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | காற்று மாசினால் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருகிறது
மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...