
ஜெய்ப்பூர்: மேயர் ஆகும் கனவை நனவாக்க 25 வயது இளம்பெண் ஒருவர், கூலிப்படையின் உதவியை நாடி, தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.
25 வயதாகும் குஷ்பு செலானி என்ற பெண், மேயர் ஆகும் கனவை நனவாக்க, பிரசாரத்துக்கு செலவிட தேவைப்படும் பணத்தைத் தவறான வழியில் திரட்ட முயன்றார். ஆடை வடிவமைப்புத்தொழிலை செய்து வந்த குஷ்பு செலானிக்கு அரசியலில் ஆர்வம் அதிகரித்தது. அதனை நிறைவேற்ற அதிகம் பணம் தேவை.
அதற்காக அவர் ரூம்போட்டு யோசித்ததில் உதித்த மகத்தான திட்டம்தான் இது. இதனை அவர் நேரடியாக செய்யாமல், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரவிந்தர் சிங் என்கிற காளியை உதவிக்கு நாடினார்.
அவரிடம், ஜெய்ப்பூரில் உள்ள மிகப்பெரிய மருத்துவர்களின் செல்லிடபேசி எண்களைக் கொடுத்து மிரட்டி ரூ.50 லட்சத்தைப் பறிக்க வேண்டும் என்பதே குஷ்பு செலானியின் திட்டம்.
இதையடுத்து, அந்த மருத்துவர்களின் செல்லிடபேசி எண்ணை, ரவிந்தர் சிங் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தனது உதவியாளர்களிடம் வழங்கி அங்கிருந்து மருத்துவர்களை மிரட்டியுள்ளனர்.
ஷியாம் சந்தர், சுனீத் ஷா ஆகிய இரண்டு மருத்துவர்களும், தங்களுக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறை உதவியை நாடினர். உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை நெருங்கினர்.
அப்போதுதான், மிகப்பெரிய ரௌடியின் நெருங்கிய உதவியாளர்தான் ரவீந்தர் சிங் என்பதும், அவர் மீது எண்ணற்ற வழக்குகள் இருப்பதும் காவல்துறைக்குத் தெரிய வந்தது.
உடனடியாக, திட்டம் வகுத்துக்கொடுத்த குஷ்பு, ரவீந்தர் சிங் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.