நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 920 கோடி டாலராகக் குறைவு
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தொகைக்கும், வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் தொகைக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த ஜூன் காலாண்டில் 920 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
ஏப்ரல் முதல் ஜூன வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 920 கோடி டாலராக உள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.1 சதவீதமாகும்.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1,790 கோடி டாலராக இருந்தது. அது, அப்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாகும்.
இருந்தாலும், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
முந்தைய காலாண்டில் அது 130 கோடி டாலராக இருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதம் ஆகும்.
காலாண்டு வரிசைப்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கு, மதிப்பீட்டு மாதங்களில் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) அதிகரித்துள்ளதே காரணம் ஆகும்.
கணினி, போக்குவரத்து, வணிகச் சேவைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, நிகர சேவை வருவாய் முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது.
இருந்தாலும், 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் மதிப்பீட்டு மாதத்தில் அது அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்களால் தாயகத்துக்கு அனுப்பப்படும் தொகையைப் பெரும்பான்மைாகக் கொண்ட தனியாா் பரிமாற்ற வருவாய் 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் அதிகரித்துள்ளது.
எனினும், முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் (2,860 கோடி டாலா்) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் (2,710 கோடி டாலா்) தனியாா் பரிமாற்ற வருவாய் குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1,340 கோடியாக இருந்த நிகர அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 510 கோடி டாலராகக் குறைந்துள்ளது. ஆனால் நிகர வெளிநாட்டு பங்கு முதலீடு 1,460 கோடி டாலரிலிருந்து 1,570 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.