அருணாசலின் 30 பகுதிகளுக்கு புதிய பெயர்.. மீண்டும் சீண்டிய சீனா!

ஏற்கெனவே மூன்று முறை அருணாசலப் பிரதேசத்துக்கு சீன அரசு பெயர் சூட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டி சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசத்தை நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வரும் சீன அரசு, தெற்கு திபெத் எனக் குறிப்பிட்டு வருகிறது. மேலும், அருணாசலப் பிரதேசத்துக்கு சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜாங்னனில் எனப் பெயரிட்டு அழைத்து வருகிறது.

இந்த நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்பு கிராமங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு குறுகிய நிலப் பகுதிகளுக்கு திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி புதிய பெயர்களை சூட்டி ஹாங்காங் நாளிதழில் சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த புதிய பெயர்கள் வருகின்ற மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்!

ஏற்கெனவே கடந்த 2017-ல் 7 பகுதிகளுக்கும், 2021-ல் 15 பகுதிகளுக்கும், 2023-ல் 11 பகுதிகளுக்கும் இதுபோன்று சீனப் பெயர்களை வைத்து அறிவிப்பு வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அருணாச்சலப் பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதையை கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததில் இருந்து சீனா மீண்டும் அருணாசலத்தை உரிமை கொண்டாட தொடங்கியுள்ளது.

அருணாசலம் குறித்து சீனாவின் அறிக்கைகளுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது ஒரு புதிய பிரச்னை இல்லை. சீனாவின் கூற்றுகள் நகைப்புக்குரியது.” என்று விமர்சித்திருந்தார்.

மேலும், அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாகவும், அப்பகுதியில் ஊடுருவல், ராணுவ நடவடிக்கைகள் போன்ற சீனாவின் அத்துமீறலை எதிர்ப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறையும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நடவடிக்கைகளின் எதிர்வினையாக அருணாசலப் பகுதிகளுக்கு பெயர் மாற்றம் செய்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில், ஏற்கெனவே கச்சத்தீவு பிரச்னையில் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே அருணாசலப் பிரதேச விவகாரத்தில் சீனா ஏற்படுத்தியுள்ள சர்ச்சை, அரசியல் அரங்கில் மேலும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com