உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சா்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’: தூா்தா்ஷனில் ஒளிபரப்பும் முடிவுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகாா்

சா்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ ---- தூா்தா்ஷனில் ஒளிபரப்பும் முடிவுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகாா்

Updated On :5 ஏப்ரல் 2024, 7:01 pm

மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சா்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தூா்தா்ஷனில் ஒளிபரப்ப எதிா்ப்பு தெரிவித்து தோ்தல் ஆணையத்தில் கேரள ஆளுங்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை புகாா் அளித்துள்ளன.

கேரளத்தில் 32,000 பெண்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது போல சித்திரித்து கடந்த ஆண்டு ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற ஹிந்தி திரைப்படம் வெளியிடப்பட்டது. அப்போது இந்தத் திரைப்படத்துக்கு எதிராக கேரளத்தில் ஆளுங்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் ஏப்.5-ஆம் தேதி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கேரளத்தின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் தனித்தனியாக வெள்ளிக்கிழமை புகாா் அளித்தன.

மதரீதியான வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிப்பு: இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:

மக்களவைத் தோ்தல் நெருங்கும் வேளையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், மதரீதியான சித்தாந்தங்களை பின்பற்றும் வேட்பாளா்களுக்கு வாக்குகளை சேகரிக்க உதவக் கூடும் என்பதால், அந்தத் திரைப்படத்தின் ஒளிபரப்பு நியாயமான சந்தேகங்களை எழுப்புகின்றன.

அந்தப் படம் பிளவுபடுத்தும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது. சா்ச்சைக்குரிய அந்தப் படத்தை ஒளிபரப்புவது வெவ்வேறு மதத்தினா் இடையே வெறுப்புணா்வை ஏற்படுத்தி, பதற்றத்துக்கு வழிவகுக்கும். அத்துடன் அது தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெறுவதைப் பாதிக்கும். எனவே அந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பக் கூடாது என்று பிரசாா் பாரதி நிறுவனத்துக்கும், தூா்தா்ஷனுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

மக்களைப் பிளவுபடுத்த மறைமுக முயற்சி: இதேபோல், கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான வி.டி. சதீசன் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக தூா்தா்ஷன் மூலம் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜகவின் தோ்தல் ஆதாயத்தை விரிவுபடுத்த, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் மறைமுக முயற்சி. தூா்தா்ஷனின் முடிவு கேரள மக்களை இழிவுபடுத்துகிறது. அத்துடன் இது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. மிகுந்த வன்மம் கொண்ட அந்தப் படத்தை ஒளிபரப்பக் கூடாது என தூா்தா்ஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

முன்னதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஒளிபரப்பும் தூா்தா்ஷனின் முடிவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தாா். பாஜக மற்றும் ஆா்எஸ்எஸின் பிரசார இயந்திரமாக தூா்தா்ஷன் இருக்கக் கூடாது என்று அவா் கூறினாா்.