புது தில்லி: கடந்த 10 ஆண்டு காலத்தில் யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ, அவர்களுக்கு நீதி வழங்கம் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்ப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து ப. சிதம்பரம் உரையாற்றினார்.
புது தில்லியில் இன்று வெளியிடப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, வேலை, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வரும் வகையில்,, நாடுமுழுவதிலுமிருக்கும் மக்களிடையே கலந்துரையாடிய பிறகு தேர்தல் அறிக்கையை தயாரித்து இன்று புது தில்லியில் கட்சியின் தலைமையகத்தில் வெளியிட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் அறிக்கையில், மதம், மொழி, ஜாதிக்கு அப்பாற்பட்டு, இந்த தேர்தலை பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்தியில் யார் வர வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக தேர்வு செய்து ஜனநாயக ஆட்சியை நிறுவுங்கள் எனவும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைப் போல, குடிமக்கள் அனைவருக்கும் 25 லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கமில்லா மருத்துவக் காப்பீடு கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதாகவும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
அனைத்து ஜாதி, சமூகத்தினருக்கும் பாகுபாடின்றி வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.