நியாய பத்திரம்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள்
நியாய பத்திரம்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

புது தில்லி: தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் அண்மையில் பேசுபொருளான நிலையில், நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்த தேர்தல் அறிக்கை முக்கியமான ஐந்து 'நீதித் தூண்கள்' என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் 25 உத்தரவாதங்களை கொடுத்துள்ளது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேர்தல் அறிக்கையானது 'ஐந்து நியாயங்களை' முக்கியத் தூண்களாகக் கொண்டிருக்கிறது. அதில் 'இளைஞர் நீதி', 'மகளிர் நீதி', 'விவசாயிகளுக்கான நீதி', 'தொழிலாளர் நீதி' மற்றும் 'சமூக நீதி' உள்ளிட்ட ஐந்து நீதித் தூண்கள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் அமைந்துளள்து. 2024 மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி..

அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணிகளில் ஒப்பந்தப் பணிகளை ரத்து செய்து, அத்தகைய நியமனங்களை முறைப்படுத்த காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

நியாய பத்திரம்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்
நீதியை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ப. சிதம்பரம்

மத்திய அரசில் பல்வேறு நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் காலியிடங்களை நிரப்புவதாக உறுதியளித்தது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஜாதி, சமூகத்தினருக்கும் வேலை வாய்ப்புகள், கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடான 10 சதவீதத்தை அமல்படுத்துவதாகவும் கூறியுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும்.

நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

25 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு டிப்ளமோ அல்லது இளநிலை பட்டம் முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்க புதிய 'பழகுநர் உரிமைச் சட்டம்' கொண்டு வரப்படும்.

மேலும், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைத்தபடி, ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்.

“ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்போம்” என்று கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்பு உள் கட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற மறுகட்டமைப்புப் பணிகள் மூலம், நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும்.

அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்து, ஆயுதப் படைகளுக்கு வழக்கமான ஆள்சேர்ப்பு முறை தொடங்கும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400க்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிப்பதாக கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில், பாஜகவில் இணைந்த பிறகு சட்டத்தில் இருந்து தப்பித்துள்ள நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்.

நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், நீட் தேர்வு, க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களில் உள்ள மூத்த பெண்மணிக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசிகளிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.

"ஆவாஸ் பாரத் கி" (awaazbharatki.in) என்று அழைக்கப்படும் ஆன்லைன் இணையதளம் மூலமாக மக்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்படும்.

"அறிக்கையில் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவை கண்டிப்பாக செயல்படுத்தப்படும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பதற்கு முன், இந்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஆழமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது" என்று கார்கே கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com