முதல் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்கள் இல்லை!

முதல் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில், 134 பெண்கள் மட்டுமே போட்டி.
முதல் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்கள் இல்லை!
ANI

மக்களவைத் தேர்தல் முதல் கட்டத்தில் 8 சதவிகிதம் மட்டுமே பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், 6 மாநிலங்கள் பெண் வேட்பாளர்களே இல்லை.

18-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்டத்தில் 102, இரண்டாம் கட்டத்தில் 89, மூன்றாம் கட்டத்தில் 94, நான்காம் கட்டத்தில் 96, ஐந்தாம் கட்டத்தில் 49, ஆறாம் கட்டம் மற்றும் ஏழாம் கட்டத்தில் தலா 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளன.

முதல் கட்டத்தில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களின் 102 தொகுதிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன.

அருணாசல பிரதேசம் (2 தொகுதிகள்), அஸ்ஸாம் (5), பிகாா் (4), சத்தீஸ்கா் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரம் (5), மணிப்பூா் (2), மேகாலயம் (2), மிஸோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தர பிரதேசம் (8), உத்தரகண்ட் (5), மேற்கு வங்கம் 3), அந்தமான்-நிக்கோபா் (1), ஜம்மு-காஷ்மீா் (1), லட்சத்தீவுகள் (1), புதுச்சேரி (1).

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் வெறும் 8 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

முதல் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்கள் இல்லை!
முதல் கட்ட மக்களவைத் தோ்தல் 21 மாநிலங்கள்- 102 தொகுதிகள் தயாா்!

அதிகபட்சமாக தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 76 பேர் பெண்கள். மணிப்பூர், நாகலாந்து, லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், திரிபுரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பெண் வேட்பாளர்களே போட்டியிடவில்லை.

அருணாசலப் பிரதேசத்தில் ஒரு பெண் வேட்பாளர், பிகாரில் 3, மத்திய பிரதேசம் 7, மேகலாயா 2, மகாராஷ்டிரம் 7, புதுச்சேரி 3, ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, உத்தரப் பிரதேசம் 7, ஜார்கண்ட் 4 மற்றும் மேற்கு வங்கத்தில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,054 வேட்பாளர்களில் 726 பெண்கள்(9%). இவர்களில் 78 பேர் மக்களவைக்கு தேர்வான நிலையில், 575 பேர் டெபாசிட்டை இழந்தனர். பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திரிணமூல் காங்கிரஸ் 41 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தது.

கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் மத்திய அரசு பெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை பார்க்கும் போது பெண்களுக்கான அங்கீகாரத்தில் அரசியல் கட்சிகள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com