கோடீஸ்வர தொழிலதிபர்கள் - கோடிக்கணக்கான மக்கள் இடையேயான போட்டி இது: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பு, அக்னிவீரர் திட்டம்.. ராஜஸ்தானில் ராகுலின் அனல்பறக்கும் பிரசாரம்
கோடீஸ்வர தொழிலதிபர்கள் - கோடிக்கணக்கான மக்கள் இடையேயான போட்டி இது: ராகுல்

அனல்பறந்துகொண்டிருக்கும் ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு எதிரான, மிக உறுதியான வாக்குறுதிகளை எடுத்துவைத்தார்.

'பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும்' மத்திய அரசு என்று கடுமையான தாக்குதலோடு பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது "பாரபட்சமான" ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார்.

அனைத்து சாதி மற்றும் சமூக மக்களுக்கும் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் ஒரு அமைப்பை கொண்டு வரப்படும் என்றும் ராஜஸ்தான் மக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

பிகானீர் பகுதியில் இன்று நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல், சாதிவாரி கணக்கெடுப்பு, மகாலட்சுமி திட்டம், தொழில்பழகுநர் திட்டம், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, அக்னிவீரர் திட்டத்தை ரத்து செய்தல் ஆகிய ஐந்து காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவாக்கு சேகரித்தார்.

கோடீஸ்வர தொழிலதிபர்கள் - கோடிக்கணக்கான மக்கள் இடையேயான போட்டி இது: ராகுல்
மக்களவைத் தேர்தல்: ஓசையில்லாமல் இருக்கும் ஒடிஸா

கட்சியின் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, சமூக நீதியை நோக்கிய ஒரு மிகப்பெரிய நகர்வாக இருக்கும் என்றும், இது நாட்டின் பரந்திருக்கும் வளங்களை பயன்படுத்துவதில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் கூறினார்.

மகாலட்சுமி திட்டமானது, ஒவ்வொரு ஆண்டும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும் என்றும், தொழில்பழகுநர் பயிற்சிக் காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான கதவுகளைத் திறக்கும் அதே வேளையில், அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும் ராகுல் உறுதியளித்துள்ளார்.

ஆயுதப் படைகளில், மோடி அரசால் அக்னிவீரர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கட்சி முதலில் இந்த சட்டத்தை ரத்து செய்யும் என்றும் அவர் கூறினார்.

பல துறைகளின் 90 அதிகாரிகள் இந்த நாட்டை நடத்துகிறார்கள், அவர்களில் மூன்று பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தனது குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல், "கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்து புதிய தொடக்கத்துக்கு வழிவகுக்குமாறு" அழைப்பு விடுத்தார்.

மிகத் துல்லியமான தரவு என்று எதுவும் இல்லை என்றாலும், நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட சாதியினராகவே உள்ளனர். ஆனால், அரசு இயந்திரங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று புள்ளிவிவரங்களோடு ராகுல் பேசியுள்ளார்.

நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20-25 கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு உதவி செய்வதாகக் குற்றம்சாட்டிய ராகுல், பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் ஏழை மக்கள் தொடர்ந்து கடன்சுமைகளை சுமந்து வருகிறார்கள் என்றார்.

வேலையில்லா இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன், ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை பிரதமர் மோடி இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனால், தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டார் என்று ராகுல் கூறி முடித்ததும், கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது.

இந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 20 - 25 கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கும், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி, அனைத்து சாதியினருக்கும் சமுதாயத்துக்கும் சமமான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் நாட்டின் வளங்களைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஏப்ரல் 5ஆம் தேதி, மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ், 5 முக்கிய நியாயங்கள் மற்றும் அதன் கீழ் 25 உத்தரவாதங்களையும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com