காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

காதல் தோல்வியும் தற்கொலை பொறுப்பும்: நீதிமன்ற உத்தரவு
காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துக் கொண்டதற்கு பெண் பொறுப்பாக முடியாது என தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து தொடர்புடைய வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பலவீனமான மற்றும் மனதளவில் உடைந்த நிலையில் ஒருவர் எடுக்கும் முடிவுக்கு மற்றொருவர் பொறுப்பாக முடியாது என தெரிவித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் கைதுக்கு எதிரான பிணை அளித்து உத்தரவிட்டது.

தற்கொலை செய்து உயிரிழந்த ஆணின் தந்தை தொடர்ந்த வழக்கில் தன் மகனுடன் காதல் உறவில் இருந்த பெண்ணும் அவர்களின் பரஸ்பர நண்பரும்தான் தற்கொலைக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் உடல் ரீதியாக ஒன்றாக இருந்ததாகவும் திருமணம் செய்துக் கொள்ளவிருந்த நிலையில் காதல் தோல்வியுற்றதால் தன் மகன் தற்கொலை செய்ததாக அவர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து தில்லி நீதிமன்றத்தின் நீதிபதி அமித் மகாஜன், “காதல் தோல்வியால் காதலர் தற்கொலை செய்து கொண்டாலோ, நன்றாக தேர்வு எழுதாததால் தேர்ச்சி பெறாது மாணவர் தற்கொலை செய்து கொண்டாலோ, வழக்கு தள்ளுபடி ஆனதால் மனுதாரர் தற்கொலை செய்து கொண்டாலோ, இவற்றுக்கு தொடர்புடைய பெண்ணோ தேர்வு நடத்துபவரோ வழக்குரைஞரோ பொறுப்பாக முடியாது” என தெரிவித்தார்.

முதல்நிலை சாட்சியாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், உயிரிழந்த ஆணின் வேதனை வெளிப்படுவதாகவும் ஆனால் அது பெண்ணின் தூண்டுதலாகக் கருத இடமில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே போல வாட்ஸ்ஆப் உரையாடல் பதிவுகளிலும் தற்கொலை செய்து இறந்தவர் மெல்லுணர்வு (சென்சிட்டிவ்) கொண்டிருப்பவராகவும் காதலி பேசாமல் போகும்போது தான் தற்கொலை செய்து இறந்துவிடுவேன் என மிரட்டுபவராகவும் இருந்துள்ளதை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிமன்றம், காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை எனவும் இருவரிடமும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com