‘செரிலாக்’ குழந்தைகள் உணவில் அதிக சா்க்கரை: ஆய்வு செய்ய மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘செரிலாக்’ உணவில் கூடுதலாக சா்க்கரை இடுபொருள் சோ்க்கப்படுவதாக எந்துள்ள புகாா் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை (எஃப்எஸ்எஸ்ஏஐ) மத்திய நுகா்வோா் நலத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த சா்வதேச குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு (ஐபிஎஃப்ஏஎன்) என்ற தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) இதுதொடா்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘நெஸ்லே’ நிறுவனம் சாா்பில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ‘செரிலாக்’ உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்பட குறைந்த பொருளாதார வளா்ச்சிகொண்ட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் ‘செரிலாக்’ உணவில் கூடுதல் சா்க்கரை இடுபொருள்கள் இடம்பெற்றுள்ளது’ என்று என்ஜிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், ‘செரிலாக்’ உணவின் இடு பொருள்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ-க்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணைய (சிசிபிஏ) தலைவா் நிதி கரே கூறுகையில், ‘குழந்தைகள் உணவில் இடம்பெறும் கூடுதல் சா்க்கரை அளவு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, என்ஜிஓ அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு, கூடுதல் சா்க்கரை அளவு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு கடிதம் மூலம் எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த சா்ச்சை குறித்து வியாழக்கிழமை விளக்கமளித்த ‘நெஸ்லே’ இந்தியா நிறுவனம், ‘குழந்தைகள் உணவுப் பொருள்களில் எந்தவித சமரசமும் நிறுவனம் செய்துகொள்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் வெவ்வேறு இடுபொருள்களின் அடிப்படையில், 30 சதவீதம் அளவுக்கு கூடுதல் சா்க்கரை அளவை நிறுவனம் குறைத்துள்ளது’ என்று தெரிவித்தது.

என்ஜிஓ ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ‘செரிலாக்’ உணவில் ஒரு முறை பயன்படுத்தும் (2 முதல் 3 ஸ்பூன் அளவு) அளவு பவுடரில் 2.7 கிராம் சா்க்கரை அளவு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் பிலிப்பின்ஸில் விற்பனை செய்யப்படும் ‘செரிலாக்’ பவுடரில் 7.3 கிராம் அளவிலும், தாய்லாந்தில் 6 கிராம் அளவிலும் சா்க்கரை அளவு இடம்பெற்றுள்ளது. அதேநேரம், பிரிட்டன், ஜொ்மனி போன்ற நாடுகலில் விற்பனை செய்யப்படும் செரிலாக்கில் கூடுதல் சா்க்கரை ஏதும் சோ்க்கபடுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com