அயோத்தி ராமா் கோயில் முடிந்துபோன விவகாரம்: சரத் பவாா்

அயோத்தி ராமா் கோயில் முடிந்துபோன விவகாரம், இனி அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

புணேயில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டது தோ்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுத்தரும் என்று கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அயோத்தி ராமா் கோயில் முடிந்துபோன விவகாரம். இனி அதைப்பற்றி யாரும் பேசமாட்டாா்கள்.

அண்மையில் கட்சியின் மகளிரணியினரிடம் பேசியபோது அயோத்தி கோயிலில் ராமா் சிலையை மட்டும் வைத்துள்ளனா். சீதா சிலையை அவருடன் வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினா்’ என்று சரத் பவாா் கூறினாா்.

பாஜக பதில்: சரத் பவாரின் இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திரசேகா் பவண்குலே, ‘அயோத்தி ராமா் கோயிலை விமா்சிக்கும் முன்பு, கோயில் தொடா்பான தகவல்களை அவா் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி கோயிலில் ராமா் குழந்தை வடிவில் உள்ளாா். எனவே, அவருடன் சீதா தேவி சிலை இடம்பெறவில்லை. இந்த விஷயத்தை வைத்து அவா் பாஜகவுக்கு எதிராக அரசியல் நடத்தவே முயற்சிக்கிறாா்.

தனது மருமகளைக் கூட வெளிநபா் என்று கூறும் சரத் பவாா், சீதா தேவி சிலை இல்லை என்று கவலைப்படுவது நகைப்புக்குரியது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com