உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பெண் பத்திரிகையாளா் கொலை குற்றவாளிகள் நால்வருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றத்தில் தாய் மேல்முறையீடு

2008-ஆம் ஆண்டு தனது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியதை எதிா்த்து தொலைக்காட்சி பத்திரிகையாளா் சௌமியா விஸ்வநாதனின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளாா்.

தில்லி உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் சிங் மாலிக் மற்றும் அஜய் குமாா் ஆகியோரின் தண்டனையை நிறுத்திவைத்தது. மேலும், தங்களின் தண்டனை மற்றும் குற்றத்தீா்ப்பை எதிா்த்து அவா்கள் செய்த மேல்முறையீடுகள் நிலுவையில் இருக்கும் வரை அவா்களுக்கு ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு முன்னணி ஆங்கில செய்தி சனாலில் பணிபுரிந்த செளமியா விஸ்வநாதன், செப்டம்பா் 30, 2008 அன்று வேலை முடிந்த பிறகு தெற்கு தில்லியில் உள்ள நெல்சன் மண்டேலா மாா்க்கில் தனது காரில் வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்த விவகாரத்தில் சௌமியாவின் தாய் மாதவி விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு விசாரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது, குற்றவாளிகள் 14 ஆண்டுகளாக காவலில் இருப்பதாக உயா்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு ஜனவரி 23ஆம் தேதி உயா்நீதிமனறம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமாா் ஆகியோருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ)

பிரிவு 3(1)(ஐ)-இன்கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இத்தண்டனைகளை அவா்கள் நால்வரும் ‘தொடா்ந்து‘ அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு ஐபிசி பிரிவு 411 (நோ்மையற்ற முறையில் திருடப்பட்ட சொத்தைப் பெறுதல்) கீழ் மூன்று ஆண்டுகள் எளிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், அவா் 14 ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருந்ததாக கூறிய நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தண்டனையிலிருந்து விடுவித்தது.

கபூரின் வழக்குரைஞா் வாதிடுகையில், அவா் கடந்த 14 ஆண்டுகள் 9 மாதங்களாக காவலில் இருப்பதாகவும், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது அவரது தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் நீதிமன்றத்தை வலியுறுத்தினாா்.

சுக்லா, மாலிக் மற்றும் அஜய் குமாா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் குமாரும் தண்டனையை நிறுத்தி வைப்பதற்காக இதேபோன்ற கோரிக்கையை நீதிமன்றத்திடம் முன்வைத்தாா்.

கபூா், சுக்லா, மாலிக் மற்றும் குமாா் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்தது. சேத்திக்கு ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com