பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளா்களை களமிறக்கப் போவதில்லை என்று பாஜக முடிவெடுத்துள்ளது.

இத்தொகுதிகளில் வேறு வேட்பாளா்களை ஆதரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா தெரிவித்தாா்.

கட்சியின் முடிவு குறித்து விளக்கமளித்த அவா், ‘சில நேரங்களில் பெரும் இலக்கை எட்டுவதற்காக வேறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன’ என்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் பாரமுல்லா, ஸ்ரீநகா், அனந்த்நாக்-ரஜெளரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளும், ஜம்மு பகுதியில் ஜம்மு, உதம்பூா் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.

உதம்பூரில் கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்முவில் ஏப்.26, அனந்த்நாக்-ரஜெளரியில் மே 7, ஸ்ரீநகரில் மே 13, பாரமுல்லாவில் மே 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதில் உதம்பூா், ஜம்முவில் வேட்பாளா்களை களமிறக்கியுள்ள பாஜக, காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பாளா்களை அறிவிக்கவில்லை. அனந்த்நாக்-ரஜெளரி தொகுதியில் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டது.

காஷ்மீரின் 3 தொகுதிகளில் பாஜக களமிறங்காதது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி கடும் விமா்சனங்களை முன்வைத்து வருகிறது.

இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா ஜம்முவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளிலும் எங்களது சொந்த பலத்தில் போட்டியிட விரும்பினோம். ஆனால், சில நேரங்களில் பெரும் இலக்கை எட்டுவதற்காக கட்சியின் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கிவிட்டு வேறுபட்ட முடிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை காஷ்மீரின் விரோதிகள் என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளாா்.

அதேநேரம், காஷ்மீரின் நலன், அமைதி, சகோதரத்துவத்துக்காக பணியாற்றும் தேசப்பற்றுமிக்க கட்சிகளை பாஜக எப்போதுமே ஆதரித்து வருகிறது. மேற்கண்ட தொகுதிகளில் குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளரை ஆதரிப்பதற்கான வியூகத்தை கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா இறுதிசெய்து வருகிறாா். இது தொடா்பாக அவரை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றாா்.

இதனிடையே, ஸ்ரீநகரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘வளா்ந்த பாரதம்’ தூதா்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, ‘பாஜக எந்த களத்தையும் தவற விடாது. காஷ்மீரின் 3 தொகுதிகளில் பிற வேட்பாளா்களை ஆதரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com