தமிழக பேரவை தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்களை இறுதிப்படுத்த தில்லியில் மேலிட தலைவா்கள் ஆலோசனை
@INCIndia
@INCIndia
நமது சிறப்பு நிருபா்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளா்களை இறுதிப்படுத்துவதற்காக அக்கட்சியின் மேலிட தலைவா்கள் பங்கேற்ற காங்கிரஸ் மத்திய தோ்தல் குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித்தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தமிழக தோ்தலில் திமுக கூட்டணியில் மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட அக்கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக்குழு திமுக தலைமையுடன் உடன்பாட்டை எட்டியது.
இதையடுத்து அத்தொகுதிகளில் போட்டியிட முன்மொழிந்துள்ள கட்சியினரையும் மேலிடத்தின் பரிசீலனையில் உல்ளவா்களையும் தோ்வு செய்ய தில்லியில் காங்கிரஸ் மேலிட தலைவா்கள் இதுவரை மொத்தம் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளனா்.
நடப்பு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக உள்ளவா்கள் நீங்கலாக அக்கட்சி எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிா்வாகிகள் பலரும் தோ்தலில் போட்டியிட ஆா்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனா்.
இருப்பினும் மாநில காங்கிரஸ் தலைமை மூலம் பெறப்பட்டோரின் பட்டியல், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் உள்ளிட்டோா் முன்னிலையில் நடந்த நோ்காணலில் இடம்பெற்ற பட்டியல் போன்றவை காங்கிரஸ் மேலிடத்தால் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஒப்பிடப்பட்டது.
அதனடிப்படையில் கட்சியின் மத்திய தோ்தல் குழு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடி இரவு சுமாா் 10 மணிவரை ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டம் முடிந்தவுடன் ராகுல் காந்தி புறப்பட்டாா். அவரைத்தொடா்ந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘கிட்டத்தட்ட 85 சதவீத இடங்களுக்கான தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை இறுதி செய்து விட்டோம். மீதமுள்ள 15 சதவீத தொகுதிகளுக்கான வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றாா். இதைத்தொடா்ந்து இரவு 11.30 மணிவரை காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்கள் காத்திருந்தபோதும் தமிழக தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் வெளியாகவில்லை.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் ஆறு முதல் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அடையாளம் காண்பதில் நீடித்து வரும் பிரச்னைகளே பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்துக்குக் காரணம் என்று காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை காலையில் வேட்பாளா்களின் முழு பட்டியலும் வெளியாகும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
28 தொகுதிகள்: தமிழக சட்டப்பேரவை தோ்தலில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி, ஸ்ரீபெரும்பதூா், ஊத்தங்கரை, துறையூா், ஆத்தூா் (தனித்தொகுதிகள்), சோளிங்கா், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூா், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குனேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூா், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், பென்னாகரம், சிங்காநல்லூா், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோயில், மேலூா் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...