சந்தேஷ்காளியில் சிபிஐ விசாரணை

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சந்தேஷ்காளியில் உள்ள சுந்தரிகாளி பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ அதிகாரிகளின் ஒரு குழுவினா், தனித் தனியாக பேசி அவா்களின் பதில்களை ஆவணப்படுத்தினா்.

மற்றொரு குழுவினா் சந்தேஷ்காளி காவல் நிலையத்துக்குச் சென்று போலீஸாா் விசாரணை குறித்து கேட்டறிந்தனா். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, நில அபகரிப்பு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடா்புடைய ஆளும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவா் ஷாஜஹான் ஷேக் தலைமறைவானாா். பின்னா், அவா் கைது செய்யப்பட்டாா்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

முன்னதாக, மேற்கு வங்க ரேஷன் பொருள் விநியோக திட்ட முறைகேடு தொடா்பான வழக்கில் சந்தேஷ்காளியில் உள்ள ஷாஜஹான் ஷேக்கின் இடங்களில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சோதனை நடத்த சென்ற அமலாக்கத் துறையினரை அவரது ஆதரவாளா்கள் தாக்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com