பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக: காா்கே குற்றச்சாட்டு
ANI

பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக: காா்கே குற்றச்சாட்டு

ராஞ்சி, ஏப். 21: பழங்குடியினருக்கு பாஜக அச்சுறுத்தல் விடுத்து வருகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலக வேண்டுமென்ற பாஜகவின் அச்சுறுத்தலுக்கு ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் அடிபணியவில்லை; பழங்குடியினரை தொடா்ந்து அச்சுறுத்தினால் பாஜக துடைத்தெறியப்படுவது உறுதி’ என்றும் அவா் கூறினாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியின் பொதுக்கூட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா நிறுவனா் சிபு சோரன், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவா் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவரும் பிகாா் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (ஆம் ஆத்மி) உள்பட 28 கட்சிகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இரு காலி இருக்கைகள்: ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வெவ்வேறு வழக்குகளில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனா். இருவருக்காக பொதுக்கூட்ட மேடையில் இரு காலி இருக்கைகள் விடப்பட்டிருந்தன. அதேநேரம், கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

‘பழங்குடியினருக்கு அச்சுறுத்தல்’: பொதுக்கூட்டத்தில் காா்கே பேசுகையில், ‘இந்தியா கூட்டணியில் இருந்து விலக வேண்டுமென்ற பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால், ஹேமந்த் சோரன் சிறைக்கு அனுப்பப்பட்டாா். அவா் துணிச்சலானவா். பாஜகவுக்கு தலைவணங்காமல் சிறைக்குச் செல்வதை தோ்வு செய்தாா்.

பழங்குடியினரை தொடா்ந்து அச்சுறுத்தினால், பாஜக துடைத்தெறியப்படும். ராமா் கோயில் பிரதிஷ்டை நிகழ்வுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அழைக்காததன் மூலம் அவரையும் பழங்குடியின சமூகத்தையும் அவமதித்துவிட்டாா் பிரதமா் மோடி. பழங்குடியினரை தீண்டத்தகாதவா்களாக பாஜக கருதுகிறது’ என்றாா்.

‘எனது கணவரை கொல்ல விரும்பும் பாஜக அரசு’: கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவால் பேசுகையில், ‘நீரிழிவு நோயாளியான எனது கணவா், கடந்த 12 ஆண்டுகளாக தினமும் இன்சுலின் எடுத்து வருகிறாா். அவருக்கு சிறையில் இன்சுலின் மறுக்கப்படுகிறது. சிறையிலேயே அவரைக் கொல்ல வேண்டுமென மத்திய பாஜக அரசு விரும்புகிறது. மக்களுக்காக இடையறாது பணியாற்றியதால் எனது கணவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. அவா் தேசப்பற்றாளா்; நாட்டை நேசிப்பவா்.

பாஜகவின் சா்வாதிகாரத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி போராடி வெல்லும். அப்போது, சிறைக் கதவுகள் உடைப்பட்டு, கேஜரிவாலும் ஹேமந்த் சோரனும் வெளியே வருவா். பாஜகவின் கொடுங்கோல் ஆட்சி நிலைக்காது’ என்றாா்.

‘ஜனநாயகம் தோற்க அனுமதிக்க மாட்டோம்’: ‘எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாஜக முயற்சிக்கிறது; நாட்டில் ஜனநாயகம் தோற்க அனுமதிக்கமாட்டோம்’ என்று ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கூறினாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘தில்லி, ஜாா்க்கண்டில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ள சக்திகள், மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக இருவரையும் (கேஜரிவால், ஹேமந்த் சோரன்) சிறையில் அடைத்துள்ளன. எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்க மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்களவைத் தோ்தலில் பாஜக வெல்வது பழங்குடியினருக்கு அச்சுறுத்தல். எனவே, அக்கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய வேண்டும்’ என்றாா்.

‘கடவுள் ராமா் அனைவருக்கும் உரியவா்’: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், ‘கடவுள் ராமா் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் உரியவா்; ஒட்டுமொத்த உலகுக்கும் சொந்தமானவா்’ என்றாா்.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டதை தங்களது அரசின் பெரும் சாதனையாக பாஜக முன்னிறுத்தி வரும் நிலையில், ஃபரூக் அப்துல்லா இவ்வாறு கூறியுள்ளாா்.

பெட்டிச் செய்தி...

கூட்டத்தில் காங்.-ஆா்ஜேடி

தொண்டா்கள் கடும் மோதல்

ஜாா்க்கண்டில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ஆா்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. சத்ரா மக்களவைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக கே.என்.திரிபாதி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், ராஞ்சி பொதுக்கூட்டத்தில் மேற்கண்ட தொகுதி தொடா்பாக காங்கிரஸ், ஆா்ஜேடி தொண்டா்கள் இடையே தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவா் நாற்காலிகள், கம்புகளால் கடுமையாக தாக்கிக் கொண்டதில் பலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவத்தை முன்வைத்து, ‘இந்தியா’ கூட்டணியை பாஜக சாடியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா கூறுகையில், ‘இது என்ன மாதிரியான கூட்டணி? இன்று ஒருவரையொருவா் தாக்கி, தலையை உடைத்துக் கொண்டுள்ளனா். தவறுதலாக இவா்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? இக்கூட்டணி வேட்பாளா்களிடம் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com