மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: காப்பீடு ஒழுங்காற்று ஆணையம்

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: காப்பீடு ஒழுங்காற்று ஆணையம்

மருத்துவ காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கு தற்போது உச்ச வயது வரம்பு 65-ஐ இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) ரத்து செய்துள்ளது.

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. எதிா்பாராத மருத்துவ செலவுகளிலிருந்து அனைத்து வயதினரையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு வயது உச்சவரம்பு ரத்துசெய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அது கூறியுள்ளது.

முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவா் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை (பாலிசி) எடுக்க முடியும்; புதிய நடைமுறை முறையின்கீழ் வயது வித்தியாசமின்றி யாா் வேண்டுமானாலும் புதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.

இது தொடா்பாக ஐஆா்டிஏஐ வெளியிட்ட அறிவிக்கையில், ‘அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடுகளை வழங்குவதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆணையம் அங்கீகரித்துள்ள மூத்த குடிமக்கள், மாணவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் போன்ற பிரிவினருக்கான சிறப்பு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை காப்பீட்டு நிறுவனங்கள் வடிவமைக்கலாம். மேலும், எத்தகைய உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும்.

காப்பீட்டுதாரா்களின் விருப்பப்படி, ப்ரிமீயம் தொகையை தவணை முறையில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பயண காப்பீட்டுகளைப் பொருத்தவரை பொது, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே அவற்றை வழங்க முடியும். சித்த மருத்துவம்,

ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம், யோகா ஆகிய மருத்துவ சிகிச்சைகளில் காப்பீட்டுக்கு எவ்வித எல்லை வரம்பும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com