மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

மன்னார் வளைகுடாவில் வெளுக்கத் தொடங்கிய பவளப்பாறைகள்: என்னாகுமோ?
பவளப்பாறைகள்
பவளப்பாறைகள்

சென்னை: பல்லுயிர்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடல் கோளத்தில் இருக்கும் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போகத் தொடங்கியிருப்பது இயற்கை மனிதனுக்கு எழுப்பும் அபாய ஒலியாக அமைந்துள்ளது.

கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல, இயற்கையை மனிதன் எந்த அளவுக்கு அழித்தொழித்திருக்கிறான், இது எந்த அளவுக்கு எதிர்வினையாற்றக் காத்திருக்கிறது, அடுத்து நிலைமை எந்த அளவுக்கு மோசமாகும்? என்னவெல்லாம் நிகழும்? என்பது குறித்த நீடித்த ஆய்வுகளை கடலுக்கடியில் நடத்த மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், மன்னார் வளைகுடாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அதாவது, "இயல்பு அளவுக்கு மேல்" மன்னார் வளைகுடாவின் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை (எஸ்எஸ்டி) காரணமாக பவளப் பாறைகள் வெளிரிப்போனத் தொடங்கி, அது விரைவில் மரணமடையலாம் என்று எச்சரித்திருந்தது. இதனால், வரும் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்திற்கு இடையில் பவளப்பாறைகள் வெளிரிப்போகத் தொடங்கும் என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக் கழகத்தால் கணிக்கப்பட்டிருந்தது.

பவளப்பாறைகள்
வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

ஆனால், கணிக்கப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்தே பவளப்பாறைகள் வெளிரிப்போகத் தொடங்கியிருப்பது, நிலைமை இன்னும் மோசமடையலாம் என்பதையே காட்டுகிறது.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநர் ஜெகதீஷ் எஸ் பாக்கன், எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் அளித்த பேட்டியில், சில இடங்களில் வெளிரிப்போன பவளப்பாறைகளை கடந்த வாரமே ஆய்வாளர்கள் கண்டறிந்தனர் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக் கழகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். துத்துக்குடியைச் சேர்ந்த சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மையம், சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் ஆராய்ச்சி மையம் இணைந்து, இப்பகுதியில் ஆய்வுகளையும் மாதிரிகளையும் சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்றார்.

மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவின் பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலையின் பரவலைப் புரிந்துகொள்ள கடல் சுழற்சி மாதிரியை மேற்கொள்வதில் சென்னை நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

அதுபோல, ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை கடல் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலையைக் கண்காணிக்க எம்ஓடிஐஎஸ் செயற்கைக்கோள் அளிக்கும் தரவு பயன்படுத்தப்படும் என்று அதிகாரி கூறினார்.

ஏப்ரல் 22 முதல் 27 வரை இந்த துரித ஆய்வு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி, மண்டபம், பால்க் வளைகுடா பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மன்னார் வளைகுடாவில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. அதாவது, 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பவளப்பாறைகள் வெளிரிப்போக ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, பழமையான பவள இனமான போரிடீஸ் அதிகளவில் வெளிரத் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீத போரிடீஸ் பவளப்பாறைகள் வெளுக்கத் தொடங்கிவிட்டன. அதில் 10 சதவீதம் முற்றிலும் வெளிரிவிட்டன. மற்றவை பகுதியாக வெளிரத் தொடங்கியிருக்கின்றன.

மோண்டிபோரா, அக்ரோபோரா போன்ற கிளைகளைக் கொண்ட பவளப்பாறை வகைகள், ஆரம்பத்தில் வெளிரிப்போகத் தொடங்கின, ஆனால், முழுமையாக வெளிரிப்போகவில்லை.

கடலுக்கடியில் நடக்கும் இந்த நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இப்பகுதியில் மழை பொழிந்தால், இந்த வெளிர்ந்த தோற்றம் மாறிவிடும். ஒருவேளை, இந்த வெப்பநிலையே தொடர்ந்து நீடித்தால், நிச்சயம்இது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தலாம், அடுத்த ஆய்வானது மன்னார் வளைகுடாவின் 21 தீவுப்பகுதிகளிலும் நடத்தப்பட்டு, பவளப்பாறைகள் வெளிரிப்போகமல் தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக இப்படி பவளப்பாறைகள் வெளிரிப்போனது கடந்த 2016ஆம் ஆண்டில்தான், அப்போது, இங்குள்ள பவளப்பாறைகளின் பரவல் 38.9 சதவீதத்திலிருந்து 22.7 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com