மோடி, ராகுல் அவதூறுப் பேச்சு: நட்டா, கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பரஸ்பரம் புகாரில் மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
நரேந்திர மோடி / ராகுல் காந்தி
நரேந்திர மோடி / ராகுல் காந்தி

புது தில்லி : ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் மக்கள் குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவதூறு பேச்சுகளுக்கு தனிநபர்களுக்கே நேரடியாக நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் நிலையில், இந்த முறை முதல் முறையாக, தேர்தல் ஆணையம், அவர்கள் தொடர்புடைய கட்சிக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் கோரியிருக்கிறது.

அதேவேளையில், தேர்தல் பிரசாரத்தின் போது பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எம்.பி. ராகுல் மீது பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீஸில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி அளித்திருக்கும் புகார் மீது ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

அனைத்து நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைவர்களும், தேர்தல் பிரசாரத்தின்போது, உயர்ந்த நெறியுடன் உரையாற்றுமாறும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு பேச வேண்டும் என்று கட்சித் தலைமை, தலைவர்களுக்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பிரதமருக்கு எதிராக வந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையமானது, பல்வேறு கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்களின் பேச்சுகளை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டத்தின் கீழ், கட்சித் தலைமைக்கு இந்த நோட்டீஸை பிறப்பித்து, முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதேப்போன்று, கார்கே மற்றும் ராகுல் மீது பாஜக அளித்த புகாரின் கீழ் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கட்சித் தலைவர்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸில், மோடி, ராகுல், கார்கே என யாரின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த நோட்டீஸில் இணைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், மோடி, ராகுல், கார்கே என மூன்று பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி அவதூறாகப்பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதுபோல, பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

‘இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரா்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவா்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று காங்கிரஸின் தோ்தல் அறிக்கையைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி விமா்சித்தாா்.

பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய பிரதமரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தோ்தல் விதிமுறைகளை மீறிய பிரதமா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கொண்ட குழு தோ்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துகளைப் பகிா்ந்தளித்துவிடும்’ என்று குறிப்பிட்டாா். ‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை’ என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com