2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

காங்கிரஸும், சமாஜவாதியும் இன்னும் தங்களின் கணக்கைக் கூட தொடங்கவில்லை
அமித் ஷா
அமித் ஷா

நடந்து முடிந்த இரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கிடைத்துள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸும், சமாஜவாதியும் இன்னும் தங்களின் கணக்கைக் கூட தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மணிப்பூரி பகுதியில் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர்,

நடந்து முடிந்த இரண்டு கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக சதமடித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதியும் இன்னும் தங்கள் கணக்கையே தொடங்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் 80க்கு 800 தொகுதிகளை பாஜக வெல்லும் என்பதை உறுதி. மக்கள் இல்லங்களின் சுவர்களில் எழுதியுள்ளது நிச்சயம் உண்மையாகும்.

இந்த நாட்டை வளமுடையதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கானத் தேர்தல் இது. பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சமாஜவாதி கட்சியில் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கிறது. முலாயம் சிங் யாதவ் மாநில முதல்வராக இருந்தார். அதன்பிறகு அவரின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வரானார். முலாயம் சிங் மறைவுக்குப் பிறகு அவரின் மருமகள் டிம்பிள் யாதவ் எம்.பி.யானார்.

தற்போதைய தேர்தலுல் கன்னெளஜ் தொகுதியில் அகிலேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மணிப்பூரியில் டிம்பிள் யாதவ், ஃபிரோசாபாத்தில் அக்‌ஷய் யாதவ், பூடெளன் தொகுதியில் ஆதித்ய யாதவ், அஸாம்கார் தொகுதியில் தர்மேந்திர யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

யாதவ் குடும்பத்துக்கு வெளியே யாரும் தகுதியான போட்டியாளர்களே இல்லையா? இம்முறை மணிப்பூரி தொகுதியில் தாமரையை மலரச் செய்து குடும்ப அரசியலை விரட்டியடிப்போம்.

பாஜக 400 தொகுதிகளில் வென்றால், அடுத்தமுறை இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என ராகுல் காந்தி பொய்பிரசாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டுமுறையும் பாஜக ஆட்சி இருந்தது. ஆனால், பிரதமர் மோடி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர் என்பதை ராகுல் அறிந்திருக்கவில்லை.

நாட்டை பொருளாதார வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வது யார்? நாட்டை பாதுகாப்பது யார்?

இந்தியா கூட்டணி வென்றால் அதன் பிரதமர் யார்? இந்த நாட்டை யார் வழிநடத்துவார்கள். பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதனை பிரதமர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார் என அமித் ஷா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com