மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களை வடிவமைப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்
Published on
Updated on
2 min read

மருத்துவ காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-ஐ இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) ரத்து செய்துள்ளது.

முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை (பாலிசி) எடுக்க முடியும். ஆனால், புதிய நடைமுறைபடி, வயது வித்தியாசமின்றி யாா் வேண்டுமானாலும் புதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது. எதிா்பாராத மருத்துவ செலவுகளிலிருந்து அனைத்து வயதினரையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு வயது உச்சவரம்பு ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, மக்களுக்கான நிதிப் பாதுகாப்பு அளிப்பதுடன், பரந்த அளவிலான மக்களிடையே சுகாதார அணுகலையும், காப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்
சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

இதுகுறித்து ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் கெயில் கூறியதாவது:

“குறிப்பிட்ட வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீடு பெறுவதில் இருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் முதியவர்கள் வயது அடிப்படையிலான தடைகளின்றி முக்கிய சுகாதார சேவையை அணுகவும், நிதிப் பாதுகாப்பு அளிக்கவும் உதவும். இந்த மாற்றத்தால் காப்பீட்டு சந்தைகளில் நுகர்வோருக்கு மேம்பட்ட சலுகைகள் மற்றும் புதிய சேவைகள் கொண்டுவரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மணிப்பால் சிக்னா மருத்துவ காப்பீட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசுன் சிக்தர் கூறுகையில், “வயது வரம்பு ரத்து செய்யப்பட்டது மூத்த குடிமக்களுக்கு முழுமையான மன அமைதியை அளிக்கும். சமீபத்தில் நாங்கள் கொண்டு வந்த ‘ப்ரைம் சீனியர்’ திட்டம் மூலம் 91-வது நாள் முதல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கவரேஜ் வழங்கி வருகிறோம். அதிகரிக்கும் முதியவர்களுக்கான தேவைகள் மற்றும் மருத்துவ பணவீக்கத்தை புரிந்து கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றத்தின் மூலம் வயதானவர்களின் உடல்நலம் மற்றும் நலவாழ்வை பாதுகாப்பதில் எங்களின் ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிசி பஜார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் வணிக தலைவர் சித்தார்த் சிங்கால் கூறுகையில், “வயது வரம்பு நீக்கப்பட்டாலும் காத்திருப்பு காலம் போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும். புதிய பாலிசி பெறும் நபர்கள் அறை வாடகை, சிகிச்சை மீதான கட்டுப்பாடுகள், பிற கட்டண கவரேஜுகளை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். வயதானவர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமைகளை காப்பீடு நிறுவனங்கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்
தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

காப்பீட்டு திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு காப்பீட்டு கட்டணத் தொகை, கவரேஜ் தொகை, காத்திருப்பு காலம், திட்டத்தில் பயன்பெறக் கூடிய நோய்கள் உள்ளிட்டவை தெளிவாக கவனிக்க வேண்டும்.

குறுகிய காத்திருப்பு காலங்கள் கொண்ட திட்டங்களை தேர்வு செய்வது மிக அவசியமான ஒன்று. அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் காத்திருப்பு காலங்கள் குறைவாக இருக்கும் திட்டங்களும் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நோ-கிளைம் போனஸ் போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இறுதி செய்வதற்கு முன்னதாக இணையத்தில் பிற நிறுவனங்களின் திட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கூடுதல் கவரேஜ் தேவைப்படும்போது டாப்-அப் செய்து கொள்ளும் வகையிலான திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதியவர்கள் ஒரு ஆண்டுக்கான தொகையை முழுமையாக செலுத்துவதில் சிரமம் இருப்பின், காலாண்டு அல்லது மாதாந்திர திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.

முதியவர்களுக்கான திட்டங்களில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சைகள், வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்கும் அம்சங்கள் மற்றும் நர்சிங் சேவைகள் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து, வயது அடிப்படையில் கட்டணங்களை மறுவடிவமைப்பு செய்து புதிய அம்சங்களை உள்ளடக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com