பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

தவறான விளம்பரத்துக்கு மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய உத்தரவு.
உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்த பாபா ராம்தேவ்
உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்த பாபா ராம்தேவ்-

பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நாளிதழில் மன்னிப்பு கோரிய விளம்பரத்தின் அசலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் நகல் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் தரப்பில் நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், விளம்பரங்களின் இ-பேப்பர்களையும், கட்டிங்களையும் ஏற்க முடியாது எனவும், அனைத்து நாளிதழ்களின் அசல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், உத்தரகண்ட் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கு மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்பும், பின்பும் பதஞ்சலி நிறுவனத்தின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் அளித்தனர்.

அதேபோல், பதஞ்சலி வழக்கில் உச்சநீதிமன்றம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விமர்சித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு விலக்கு அளித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்த பாபா ராம்தேவ்
பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

வழக்கின் பின்னணி

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி, கடந்த பிப்.27-ஆம் தேதி பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரிய நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நாளிதழ்களில் பொது மன்னிப்பு கோரி விளம்பரம் அளிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி, தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து நாட்டில் உள்ள முன்னணி 67 நாளிதழ்களில் மன்னிப்பு வெளியிடப்பட்டதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விளம்பரங்கள் உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் இருப்பதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமனறம், தவறான விளம்பரங்கள் கொடுத்த அளவில் மன்னிப்பு வெளியிடுமாறு உத்தரவிட்டு ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

இதற்கிடையே, பதஞ்சலி விளம்பரங்களை கண்டும் காணாமல் மத்திய அரசும், உத்தரகண்ட் அரசும் கண்களை மூடிக்கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த உத்தரகண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com