
வயநாடு நிலச்சரிவிலிருந்து மீண்ட பெண்ணின் பேட்டி வைரலாகியுள்ளது.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பலரும் நீரால் அடித்துச் செல்லப்பட்டு பலியாகினர். சிலர், மரங்களைப் பிடித்தும், பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றும் தங்களைக் காத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், நிலச்சரிவிலிருந்து மீண்ட பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார். அதில், “நிலச்சரிவு ஏற்பட்டதும் கடுமையான பாதிப்புகளுடன் என் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு ஒரு மரத்திற்கு அடியே இருந்தேன். அதிகாலை 1.30 மணியிலிருந்து கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, எங்கள் அருகே மூன்று யானைகள் நின்றுகொண்டிருந்தன.
அதில் ஒரு ஆண் யானை மிக அருகே காதுகளை ஆட்டியபடி எங்களை நோக்கி நின்றுகொண்டிருந்தது. நான் அதைப் பார்த்து, ‘நாங்கள் பெரிய துன்பத்திற்குப் பின் இங்கே வந்திருக்கிறோம். யாராவது வந்து எங்களைக் காப்பாற்றும் வரை ஒன்றும் செய்யாதே’ என மன்றாடினேன். காலை 6 மணிக்கு பக்கத்தில், காபி தோட்டத்திலிருந்து மீட்க வந்த ஆள்களின் குரல் கேட்டது. நாங்கள் அங்கிருந்து செல்லும்வரை அந்த ஒரு யானை எந்த உணவையும் எடுக்கமால் எங்களருகே கண்ணீர்விட்டபடியே நின்றிருந்தது.” என உருக்கமாகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
நிலச்சரிவில் இதுவரை 320 பேர் பலியாகியது பெரிய துயரை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.