
உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் விவசாய அறிவியல் மையத்தின் 32வது சர்வதேச வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச சங்க விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இதுபோன்ற ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கான தீர்வுகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தியா பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உபரி நாடாக திகழ்கிறது.
இந்தியாவில் 15 விவசாய பருவ மண்டலங்கள் உள்ளன. வெவ்வேறு விவசாய நடைமுறைகளும் உள்ளன. இந்த பன்முகத்தன்மை தான் உலகின் உணவு பாதுகாப்புக்கான நம்பிக்கையின் கதிராக விளங்குகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு சர்வதேச அளவில் கவலையாக இருந்தது. இன்று உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
உணவு மற்றும் விவசாயத்திற்கான நமது பாரம்பரியம் மற்றும் அனுபவங்கள் நம் நாட்டைப் போலவே பழமையானவை. விவசாய பாரம்பரியத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள்கொண்ட உணவுகளை உட்கொள்ளும் ஆயுர்வேத விஞ்ஞானமும் நம்மிடம் உள்ளது.
இந்தியாவில் விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்து ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஆனால் இதற்கு இந்தியாவில் தீர்வு உள்ளது.
சர்தார் வல்லபாய் படேலை நினைவுகூர்ந்த பிரதமர், விவசாயிகளின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்ததாகக் கூறினார். சர்வதேச விவசாயப் பொருளாதார நிபுனர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள முப்பெரும் மாநாடு 2024 ஆகஸ்ட் 2 முதல் 7 வரை நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.