
இந்தியாவில் காளான்கள் போலப் பெருகி வரும் பயிற்சி மையங்களை நெறிமுறைப்படுத்த முழுமையான கொள்கைத் தீர்வு தேவை என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு தில்லியின் பழைய இந்திரா நகர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு, குடிமைப் பணியியல் தேர்வுகளுக்கு படித்து வந்த மாணவர்கள் 3 பேர் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பயிற்சி நிறுவனங்களை நெறிமுறைப்படுத்துவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”உயர்கல்வித் துறை மாநிலங்களவையில் வழங்கியுள்ள தரவுகளின்படி பயிற்சி மையங்கள் மூலம் வரும் ஜிஎஸ்டி வருவாய் கடந்த 2019 மற்றும் 2024 காலக்கட்டத்தில் ரூ. 2,241 கோடியிலிருந்து ரூ. 5,517 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 146% வரி வருவாய் அதிகரித்து, பயிற்சி மையங்களின் வளர்ந்து வரும் சந்தை அளவினைக் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜிஎஸ்டி வருவாய் 2024 நிதியாண்டில் ரூ.5,517 கோடி வசூலாகியிருப்பது, பயிற்சி மையங்களின் சந்தை ரூ. 30,653 கோடி உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. உயர்கல்விக்கான மத்திய அரசு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இந்த மதிப்பு மூன்றில் இரு பங்கு இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
இந்தியாவில் காளன்கள் போலப் பெருகி வரும் பயிற்சி மையங்களை நெறிமுறைப்படுத்த முழுமையானக் கொள்கைத் தீர்வு தேவை. பாடத்திட்டங்கள் திருத்தப்பட்டு பள்ளி பாடங்களுடன் இணைக்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கான வசதிகள் சரியாக செய்துத் தரப்படுவதுடன் கல்வியின் தரத்தை உயர்த்த முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்” என பதிவில் ஜெய்ராம் ரமேஷ் தனது குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் சுகந்த மஜும்தார் வழங்கிய பதிலில், ”நாட்டில் எந்தவொரு கொள்கை அல்லது ஒழுங்குமுறை இன்றி தனியார் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜனவரி 16 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயிற்சி மையங்களின் ஒழுங்குமுறைக்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த விஷயத்தில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதனை ஜெய்ராம் ரமேஷ் இன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.