
பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது,
வயநாட்டு மக்களைப் புரட்டிப்போட்ட நிலச்சரிவு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 206 பேரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடலின் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் ஆவார். மீட்கப்பட்ட 148 உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 206 பேர் காணாமல் போயுள்ளனர். அடையாளம் காணப்படாத 67 பேரின் உடல்கள் பஞ்சாயத்துகள் இறுதிச் சடங்குகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
தீயணைப்புப் படை, என்டிஆர்பஃப், வனத்துறை,காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் என 1,419 பணியாளர்கள் உள்ளடக்கிய முகமைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கே-9 குழுக்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் குழுவும் பங்கேற்றுள்ளது. ரேடார் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான மேம்பட்ட கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும். இப்பகுதியில் அழிந்த பள்ளிகளை கல்வி அமைச்சர் பார்வையிட்டு, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.