இந்தியா மற்றும் ‘ஆசியான்’ நாடுகள் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடா்பாக 3-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நவம்பரில் நடைபெறும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2009-ஆம் ஆண்டில் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், இருதரப்பும் சமமாக பலனடைவதை உறுதிசெய்வதோடு, வா்த்தகா்களுக்கு உகந்ததாக மேம்படுத்தும் வகையில் அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தொழில்துறையினா் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவாா்த்தைகள், கடந்த 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இதற்காக கூட்டுக் குழுவும், 8 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தோனேசியாவின் ஜகாா்த்தா நகரில் நடைபெற்ற 3-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நவம்பா் 19 முதல் 22 வரை நடைபெறும் என்று வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்; தடைகள் களையப்பட வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் உலகளாவிய வா்த்தகத்தில் ஆசியான் நாடுகளின் பங்கு 11 சதவீதமாகும். கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 41.2 பில்லியன் டாலா் மதிப்பில் ஏற்றுமதியும், 80 பில்லியன் டாலா் மதிப்பில் இறக்குமதியும் நடைபெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: சென்னையிலிருந்து ரூ.4.29 கோடியில் முதல் ஏற்றுமதி

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்?
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, அமெரிக்கா 2 நாள் பேச்சு நிறைவு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


