
ஹைதராபாத் வங்கியில் கடன் வாங்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டவர், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் சந்துலால் பரதாரி கிளையில் பணிபுரிந்த வி.சலபதி ராவ், ரூ. 50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2002ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
எலக்ட்ரானிக் கடை வைப்பதற்காக போலி சம்பள சான்றிதழ் உள்ளிட்டவை பயன்படுத்தி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் பெயரில் சலபதி ராவ் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு சலபதி ராவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு அவர் தலைமறைவானார்.
சலபதி ராவின் மனைவி மீதும் மோசடி புகார் எழுந்த நிலையில், கணவரை காணவில்லை என்று காமாதிபுரா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு, தனது கணவர் 7 ஆண்டுகளாக திரும்பாததால், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதனை ஏற்ற நீதிமன்றம், சலபதி ராவ் இறந்துவிட்டதாக அறிவித்தது, மேலும், முக்கிய குற்றவாளி உயிரிழந்ததால், மோசடி வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சலபதி ராவின் சொத்தை முடக்கும் முயற்சிக்கும் அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றார்.
நாடு முழுவதும் சுற்றிய குற்றவாளி
சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் தமிழகத்தில் உள்ள சேலத்துக்கு சலபதி ராவ் தப்பிச் சென்று, வினித் குமார் எனப் பெயரை மாற்றிக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதும், வினித் குமார் என்ற பெயரில் ஆதார் எண் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை சிபிஐ போலீஸார் பிடிப்பதற்குள், யாரிடமும் கூறாமல் 2014ஆம் ஆண்டு சேலத்திலிருந்து தப்பி போபாலுக்குச் சென்ற சலபதி ராவ், அங்கு வங்கிக் கடன் வசூலிக்கும் முகவராக பணிபுரிந்துள்ளார்.
தொடர்ந்து, உத்தரகண்ட் மாநில ருத்ராபூருக்கு தப்பிய சலபதி, அங்கி பள்ளியில் பணிபுரிந்துள்ளார். ருத்ராபூரை சிபிஐ அடைவதற்குள் அங்கிருந்து தப்பிய அவர், 2016ஆம் ஆண்டு அவுரங்காபாத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
வினித் குமார் என்ற பெயரில் தொடங்கப்பட்ட கூகுள் மெயின் ஐடி மற்றும் அவரது ஆதார் அட்டையை வைத்து போலீஸார் தொடர்ந்து சலபதியை துரத்திச் சென்றுள்ளனர்.
அவுரங்காபாத்தில் தனது பெயரை ஸ்வாமி விதிதாத்மானந்த் தீர்த்தா என்று மாற்றிக்கொண்டு மற்றொரு ஆதார் அட்டையைப் பெற்றுள்ளார் சலபதி. அந்த ஆசிரமம்த்தின் மேலாளரிடன் ரூ. 70 லட்சம் மோசடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிய சலபதி, 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் தப்பியுள்ளார்.
ராஜஸ்தானின் பரத்பூரில் 2024 ஜூலை மாதம் வரை தங்கியிருந்த சலபதி, பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமப் புறத்தில் சாமியார் வேடத்தில் தங்கியிருந்தார்.
அங்கிருந்து கடல் வழியாக இலங்கை தப்ப சலபதி திட்டமிட்டிருந்த நிலையில், நரசிங்கநல்லூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிபிஐ போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, திருநெல்வேலியில் இருந்து ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்ட சலபதி, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 16 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
வங்கி மோசடி வழக்கில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிபிஐ காவல்துறையினர் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.