வங்கதேசத்தில் உடனடி அமைதி நிலவவில்லை எனில் அகதிகளாக மக்கள் இந்தியாவுக்கு வரவாய்ப்புள்ளதாக சசி தரூர் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் லண்டன் செல்வார் எனத் தெரிகிறது.
இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் செய்தியாளர்களுடன் பேசுகையில் கூறியதாவது:
வங்கதேசத்தின் தற்போதைய சூழ்நிலையில், இந்தியா அவர்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டியது, நாம் அவர்களுடன் துணை நிற்கிறோம் என்பதுதான். வேறு எதுவும் இப்போது தேவையில்லை.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் உள்ளிட்டவை மீது தாக்குதல்கள் நடைபெறுவதாக குழப்பமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஓரிரு நாள்களில் அங்கு அமைதியான சூழல் நிலவும் என்று நம்புகிறேன். அவ்வாறு இல்லையெனில் அகதிகளாக நம் நாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. அது கவலையளிக்கும் விஷயமாக இருக்கும்.
இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் இதனை உன்னிப்பாக கவனித்து, வங்கதேச மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.
அங்கு இடைக்கால அரசில் யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை.கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் செல்வாக்கு அங்கு அதிகரித்து வருவது, சீனா மற்றும் பாகிஸ்தானின் தலையீடு உள்ளிட்டவை கவலையளிப்பதாக உள்ளது.
நிலையற்ற, நட்பில்லாத ஒரு அண்டை நாடாக வங்கதேசம் இருக்கக் கூடாது. வங்கதேசத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இந்தியா இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருக்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.