உடல் எடையைக் குறைக்க இரவு முழுவதும் பயிற்சியில் ஈடுபட்டதால் நீரிழப்பு காரணமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் உள்ள கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியிருந்த நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோவுக்கு மேல், அதாவது 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற உடல் எடை சோதனைக்காக, வினேஷ் போகத் நேற்று இரவு முழுவதும் பயிற்சியில் ஈடுபட்டு சுமார் 2 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்துள்ளார். இருப்பினும் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் வினேஷ் போகத் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் உள்ள கிளினிக்கில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்கட்ட தகவல்களை கேட்டறிந்ததாகவும், வினேஷ் போகத் தகுதிநீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து மக்களவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று பிற்பகலில் விளக்கம் அளிக்கவுள்ளார்.