
பெங்களூரு: பெங்களூரு அருகே எடேஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில், எட்டுமாத கர்ப்பிணி மீது டிரக் மோதியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பிறந்து, தாயும் சேயும் சில நொடிகளில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிஞ்சனா என்ற 30 வயது கர்ப்பிணி, தனது கணவர் மஞ்சுநாத் உடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது டிரக் ஒன்று மோதியது.
இதில், சாலையில் விழுந்த சிஞ்சனா மீது டிரக் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிஞ்சனாவுக்கு சாலையிலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நிமிடத்திலேயே குழந்தையும், தாயும் பலியாகினர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளரான மஞ்சுநாத், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு நிமிடத்தில் கண் முன்னே தனது மனைவியும், பிறந்த குழந்தையும் துடிதுடித்து பலியானதைப் பார்த்த மஞ்சுநாத், செய்வதறியாது கதறி அழுதார்.
இருவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்று மாலை, சிஞ்சனாவுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கவிருந்த நிலையில், இப்படி ஒரு விபத்தில் சிக்கியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பிரேக் போட்டதால், மஞ்சுநாத்தும் பிரேக் போட்டு நிறுத்தியிருக்கிறார். ஆனால், பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி பிரேக் போடாமல் மஞ்சுநாத் வண்டி மீது மோதியிருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 90 விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.