
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மறுத்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) காலை செய்யப்பட்ட உடல் பரிசோதனையில், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மக்களவையில் மன்சுக் மாண்டவியா நேற்று விளக்கம் அளித்தார்.
இருப்பினும், மாநிலங்களவையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மறுக்கவே, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அவைத் தலைவர் பேசுகையில், 'நீங்கள் மட்டும்தான் வருத்தத்தில் இருக்கிறீர்களா? குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, நான் உள்பட ஒட்டுமொத்த நாடுமே வருத்தத்தில் உள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை அரசியலாக்க வேண்டாம். இதனை அரசியலாக்குவது அவரை அவமரியாதை செய்வது போன்றது. அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும்' என்றார்.
மேலும், வினேஷ் போகத்துக்கு பதக்கம் வென்றவருக்கான மரியாதை தரப்படும் என ஹரியாணா அரசு கூறியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
முன்னதாக, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் இன்று காலை அறிவித்தார். போராட இனி என்னிடம் வலுவில்லை என உருக்கமாகக் கூறியிருந்தார். மேலும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று ஒலிம்பிக் சங்கத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.