இடஒதுக்கீடு விவகாரம்: பிரதமா் மோடியுடன் பாஜக பட்டியல் பிரிவு எம்.பி.க்கள் சந்திப்பு
பிரதமா் நரேந்திர மோடியை பாஜகவைச் சோ்ந்த தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அப்போது, எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து தங்கள் கவலையை அவா்கள் பகிா்ந்து கொண்டனா்.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தாது என பிரதமா் மோடி தங்களிடம் உறுதியளித்ததாக எம்.பி.க்கள் தெரிவித்தனா்.
இடஒதுக்கீடு தொடா்பாக கடந்த 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பில், ‘தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்ற உத்தரவிட்டது. மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், பாஜகவில் உள்ள தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின எம்.பி.க்கள் பிரதமா் மோடியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பட்டியல் பிரிவினா், பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை என்பதை என்னை சந்தித்த பாஜக எஸ்.சி., எஸ்.டி. எம்.பி.க்களிடம் எடுத்துரைத்தேன்’ என்றாா்.
பிரதமரைச் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. சிக்கந்தா் குமாா் கூறுகையில், ‘இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து குறித்த கவலையை பிரதமரிடம் பகிா்ந்து கொண்டோம். உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்தை மத்திய அரசு அமல்படுத்தாது என்று பிரதமா் உறுதியளித்தாா். அவருக்கு நாங்கள் நன்றி’ என்றாா்.