போபால்: மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியை ஒரு பெண் தேய்த்துக் கழுவும் விடியோ வைரலான நிலையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தில், சட்டத்துக்கு விரோதமாக இயங்கி வந்த ஆயுதத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர்.
மத்திய பிரதேசம் மொரேனாமாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையில் சோதனை செய்து உரிமையாளர்களைக் கைது செய்திருக்கிறார்கள்.
பல்வேறு விநோத விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. ஆனால், ஒரு பெண் துருப்பிடித்த துப்பாக்கிகளை நன்கு சுத்தம் செய்யும் விடியோ ஒன்று அண்மையில் வைரலானது. இதையடுத்தே, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
சில துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு, ஒரு பெண் சுத்தம் செய்யும் விடியோவை பரப்பியவரின் முகவரியை வைத்து காவல்துறையினர் விசாரணைத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, மொரேனா மாவட்டத்தில் மஹுவா காவல்நிலையத்துக்கு உள்பட்ட கஷேஷ்புரா கிராமத்தில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு நடந்த சோதனையில், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வந்த ஆயுதத் தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக சக்தி கபூர் என்பவரையும் அவரது தந்தையையு கைது செய்தனர். விடியோவில் இருந்த பெண்யைத் தேடி வருகிறார்கள்.
இவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்களும் அங்கு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து, தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர். இவர்கள் மூலம், சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தல் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கண்டறிவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.