கல்பேட்டை: வயநாட்டில் நிலச்சரிவு நேரிட்டு பாதிக்கப்பட்ட இடங்களில், ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் சுமார் 2000 பேர் பங்கேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள், முகாமில் தங்கியிருப்போர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என ஞாயிற்றுக்கிழமை நடந்த தேடுதல் பணியில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.
இந்த தேடுதல் பணியின்போது மூன்று உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை மனிதர்களுடையதா என்பது உடல்கூறாய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என்றும், ஒரு மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டதாகவும், இது நிலச்சரிவில் பலியானவருடையதா என்பதையும் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிா்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளத்தின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இதுவரை 229 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 178 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 51 பேர் அடையாளம் காணப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய தேடுதல் பணியானது, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட ஆறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பணியில் பங்கேற்றிருந்தனர். தங்களது உறவினர்களை இழந்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள், உறவினர்களை தேடி வந்தவர்கள் என அனைவரும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்றதொரு மிகப்பெரிய தேடுதல் பணி சாலியாற்றில் திங்கள் மற்றும் செவ்வாயன்றும் தொடரும் என்று அமைச்சர் முகமது ரியாஸ் அறிவித்திருந்தார். இந்தப் பணியானது முண்டேரி பண்ணை முதல் பரப்பன்பாரா என 5 கிலோ மீட்டர் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புப் படை போன்ற நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தத.
மறுபக்கம், பனன்கயா வனப்பகுதியிலும் தன்னார்வலர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழு தேடுதல் பணியில் ஈடுபடுகிறார்கள்.