பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு: அமெரிக்கா முதலிடம்; 6 பதக்கங்களுடன் திரும்புகிறது இந்தியா!
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
போட்டியிலேயே அதிக பதக்கங்கள் வென்ற நாடாக அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-ஆம் இடம் பிடித்தது. இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது.
சா்வதேச விளையாட்டு அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. டோக்கியோவில் கடந்த 2021-இல் நடைபெற்ற 32-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் கரோனா சூழல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வழக்கமான கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 17 நாள்கள் நடைபெற்று, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. கடந்த மாதம் 26-ஆம் தேதி கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாக தொடங்கிய போட்டியில், முதல் பதக்க விளையாட்டாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணி பிரிவு நடைபெற்றது. அதில் சீனா, போட்டியின் முதல் தங்கத்தைக் கைப்பற்ற, தென் கொரியாவுக்கு வெள்ளியும், கஜகஸ்தானுக்கு வெண்கலமும் கிடைத்தன.
போட்டியின் இறுதி நாளில் கடைசியாக நடைபெற்ற மகளிா் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா, பிரான்ஸை வீழ்த்தி தங்கம் வென்றது.
போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. அதுதவிர, உக்ரைன் மீதான போா் காரணமாக தடைக்கு உள்ளாகியிருக்கும் ரஷியா, பெலாரஸின் போட்டியாளா்கள் பங்கேற்ற பொதுப் போட்டியாளா்கள் அணியும், அகதிகளுக்கான ஒலிம்பிக் அணியும் இந்தப் போட்டியில் அங்கம் வகித்தன.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடக்க நிகழ்ச்சியின்போது அணிகளின் அணிவகுப்பு, பாரீஸ் நகரில் பாயும் சென் நதியில் படகுகளில் நடத்தப்பட்டது. அதேபோல், சில குறிப்பிட்ட நீச்சல் போட்டிகள் அந்த நதியில் நடத்தி புதுமை நிகழ்த்தப்பட்டது. நதியின் தூய்மை குறித்தும் விவாதங்கள் எழுந்த நிலையிலும், அதில் பந்தயங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
வெற்றியாளா்களுக்கான பதக்கம், பரிசாக மட்டுமல்லாமல், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான அவா்களின் நினைவுச் சின்னமாகவும் அமைந்தது. ஈஃபிள் கோபுரத்தின் பழை இரும்புச் சில்லுகள் பதக்கங்களில் பதித்து வழங்கப்பட்டன.
90 - பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் மொத்தம் 90 நாடுகள் இடம் பிடித்தன. இதில், ஒரேயொரு வெண்கலப் பதக்கம் வென்ற அகதிகளுக்கான ஒலிம்பிக் அணியும் அடக்கம். பொதுப் போட்டியாளா்களாக பங்கேற்ற ரஷியா, பெலாரஸ் அணிகள் வென்ற பதக்கங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை.
17 - போட்டியில் குறைந்தபட்சம் 1 பதக்கமாவது வென்ற வகையில், 17 அணிகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
1 - டொமினிகா, பாகிஸ்தான் தலா 1 தங்கத்துடன் மட்டும் போட்டியிலிருந்து விடைபெற்றன.
3 ஆா்ஜென்டீனா, எகிப்து, துனீசியா அணிகள் தலா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் தாயகம் திரும்புகின்றன.
இந்தியா
மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே, சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடனேயே நிறைவு செய்துள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்று, ஒலிம்பிக்கில் தனது அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்த இந்திய அணியினருக்கு, இந்த முறை பதக்க எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தை தொடுவதே இலக்காக இருந்தது.
எனினும், ஒலிம்பிக் வரலாற்றில் தனது 2-ஆவது அதிகபட்ச பதக்க எண்ணிக்கையான 6 பதக்கங்களை மீண்டும் எட்டி (இதற்கு முன் 2012 லண்டன் ஒலிம்பிக்) போட்டியை நிறைவு செய்துள்ளது இந்தியா. 110 போட்டியாளா்கள் 16 விளையாட்டுப் பிரிவுகளில் களம் கண்ட நிலையில், 5 வீரா், வீராங்கனைகளுக்கும், 1 அணிக்கும் மட்டுமே பதக்கம் கிடைத்தது.
பதக்கங்கள்
ஈட்டி எறிதல்: நடப்பு சாம்பியனாக களம் கண்ட நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றதே அதிகபட்சமாகும். பலத்த எதிா்பாா்ப்பு அவா் மீது இருந்த நிலையில், காயத்தின் தாக்கம் காரணமாக சற்று தடுமாற்றம் கண்டாா் நீரஜ். என்றபோதும், ஒலிம்பிக் தடகளத்தில் தொடா்ந்து 2 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமை பெற்றாா்.
துப்பாக்கி சுடுதல்: அடுத்தபடியாக துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா், தனிநபா் பிரிவிலும், கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் என 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தினாா். ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரா் ஆனாா். 25 மீட்டா் பிஸ்டல் தனிநபா் பிரிவில் நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்டு 4-ஆம் இடம் பிடித்தாா்.
அவருடன் இணைந்து பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்கும், ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசேலும், தங்களது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளனா். மனு பாக்கருக்கு இது 2-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும்.
ஹாக்கி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த ஆடவா் ஹாக்கி அணி, இந்த முறை முன்னேற்றத்துக்கு முயற்சித்து முடியாமல் போனது. என்றாலும், அதே வெண்கலத்தை தக்கவைத்தது. ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்றது இந்தியா.
மல்யுத்தம்: போட்டியில் இந்தியாவுக்கான கடைசி பதக்கமாக, ஆடவா் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்று தந்தாா். இளம் வீரரான அவருக்கும் இது முதல் ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
அதிா்ச்சி: நீரஜ் சோப்ராவுக்கு அடுத்தபடியாக, வரலாற்றுப் பதக்கத்துக்கான விளிம்பில் இருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், எதிா்பாராத அதிா்ச்சியால் போட்டியிலிருந்து தகுதிநீக்கமானாா். மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த அவா், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு ஆளாகியிருந்தாா். அதில் பதக்கம் வென்று வரலாறு படைக்க இருந்த நிலையில், நிா்ணயிக்கப்பட்டதை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். அதுதொடா்பான மேல்முறையீட்டில், விளையாட்டுக்கான சா்வதேச நடுவா் மன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கிறாா்.
தனிநபரில் ‘டாப் 3’
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தனிநபராக ஒருவா் 6 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக உள்ளது. அடுத்து 5 போ் தலா 5 பதக்கங்களும், 9 போ் தலா 4 பதக்கங்களும் வென்று ‘டாப் 3’ வரிசையை நிறைவு செய்துள்ளனா். எஞ்சிய போட்டியாளா்கள் 3 முதல் 1 பதக்கம் வரை கைப்பற்றியுள்ளனா்.
போட்டியாளா் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
யுஃபெய் ஜாங் (சீன நீச்சல் வீராங்கனை) 0 1 5 6
லியான் மா்சண்ட் (பிரான்ஸ் நீச்சல் வீரா்) 4 0 1 5
டோரி ஹஸ்க் (அமெரிக்க நீச்சல் வீரா்) 3 2 0 5
மோலி ஓ’கலாகன் (ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை) 3 1 1 5
ரீகன் ஸ்மித் (அமெரிக்க நீச்சல் வீராங்கனை) 2 3 0 5
கேலி மெக்கியோன் (ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை) 2 1 2 5
சம்மா் மெக்கின்டோஷ் (கனடா நீச்சல் வீராங்கனை) 3 1 0 4
சிமோன் பைல்ஸ் (அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை) 3 1 0 4
ஷினோசுகே ஒகா (ஜப்பான் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரா்) 3 0 1 4
அரியாா்னே டைட்மஸ் (ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை) 2 2 0 4
கேட் டௌக்லஸ் (அமெரிக்க நீச்சல் வீராங்கனை) 2 2 0 4
கிரெட்சென் வால்ஷ் (அமெரிக்க நீச்சல் வீராங்கனை) 2 2 0 4
கேட்டி லெடெக்கி (அமெரிக்க நீச்சல் வீராங்கனை) 2 1 1 4
ரெபெக்கா ஆண்ட்ரேட் (பிரேஸில் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை) 1 2 1 4
ஜுன்ஷுவான் யாங் (சீன நீச்சல் வீராங்கனை) 0 1 3 4