
பாஜக ஆளுங்கட்சியாக உள்ள மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் நூல்களை கல்லூரிகளில் பாடமாக சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரதிய ஞான பரம்பரை, அதாவது இந்திய பாரம்பரியத்தைப் பற்றிய ஞானத்தை மாணாக்கர்களுக்குப் புகட்டும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 88 புத்தகங்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உயர்கல்வித் துறை, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தல்களை சமீபத்தில் வழங்கியுள்ளது. அதில், கல்லூரிகளில் பிரத்யேகமாக, பாரதிய ஞான பரம்பரை பிரிவை உருவாக்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரியத்தை குறித்து மாணவர்கள் கற்றுத் தேர்ந்திட, அவர்களுக்காக இளங்கலைப் பாடப்பிரிவுகளை உருவாக்கிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்ஸின் கல்விப் பிரிவான ‘வித்யா பாரதியின்’ முன்னாள் பொதுச்செயலர் திநாநத் பத்ரா எழுதிய புத்தகங்கள் - 14, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் சோனி எழுதிய புத்தகங்கள் - 3 ஆகியவை உள்பட மொத்தம் 88 புத்தகங்கள் மாணவர்கள் படிப்பதற்காக கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆளுமைத் திறன் வளர்த்தல் குறித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
வலதுசாரி கொள்கைகளில் தீவிரப் பற்று மிக்கவரான திநாநத் பத்ரா, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கல்வியிலும் புகுத்தி வருபவர். இந்த நிலையில், பஞ்சாப் புரட்சிக் கவிஞர் அவ்தார் பாஷ் இயற்றிய ‘சப்ஸே கதர்னாக்’ என்ற கவிதைத் தொகுப்பை 11-ஆம் வகுப்பு ஹிந்தி பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டுமென்பதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் திநாநத் பத்ரா.
திநாநத் பத்ரா எழுதிய, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை உள்ளடக்கிய புத்தகங்களை குஜராத் அரசு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாடமாக அறிமுகப்படுத்தியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடம் திணிக்கும் முயற்சியாக உயர்கல்வித் துறையில் மத்திய பிரதேச அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், பிரிவினைவாதம் மற்றும் வெறுப்புக் கொள்கைகள் மூலம் மாணவர்களின் மனதில் விஷத்தை ஏற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் தேசிய கல்விக் கொள்கை-2020-இன் கீழ், இந்த நடவடிக்கையை மத்திய பிரதேச அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.