
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின்(செபி) தலைவர் ராஜிநாமா செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவு குறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
1. செபி மற்றும் அதானிக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணத்தை பறிகொடுக்க முடியாது. செபி தலைவர் ராஜிநாமா செய்வதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு செய்ய வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும்.
2. வேலையின்மை, பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வீட்டு செலவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
3. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் தடையின்றி தொடர்கிறது. மக்கள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
4. விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரி காங்கிரஸ் போராடும். தேசபக்தியுடைய நமது இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
5. ரயில்கள் தடம் புரளும் சம்பவம் வாடிக்கையாகிவிட்டது. இதனால், கோடிக்கணக்கான பயணிகள் அவதிப்படுகின்றனர். காலநிலை தொடர்பான பேரழிவுகள் மற்றும் சீர்குலைந்து வரும் உள்கட்டமைப்பு கவலையை ஏற்படுத்துகின்றன.
இந்த பிரச்னைகளை வைத்து தேசிய அளவில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், செபியின் தலைவா் மாதவி புரி புச் பங்குகளை வைத்திருந்ததை ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.