
உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, கடன் தொல்லையால், ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன்பு செல்ஃபி எடுத்து கடை ஊழியருக்கு அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை இருவரும் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், தற்கொலை செய்துகொண்ட நகைக் கடை உரிமையாளர் சௌரவ்வின் (35) உடல் கரை ஒதுங்கியது. அவரது மனைவியின் உடல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறப்பதற்கு முன்பு, தம்பதி தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில், தங்களுக்கு கடன் அதிகமாகிவிட்டதாகவும், அதனை அடைப்பதற்கு வேறு வழியில்லாமல், நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையை இழந்து தற்கொலை செய்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்கள்.
மேலும், தங்களது இரண்டு குழந்தைகளையும், அவரது பாட்டி பார்த்துக்கொள்வார் என்றும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு செல்ஃபி எடுத்து வாட்ஸ்ஆப்பில் அனுப்புவேன் என்றும் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். அதில் ஆகஸ்ட் பத்து என்று தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலையிலிருந்து இருவரையும் காணவில்லை என்று புகார் கொடுத்து குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை செல்ஃபி வந்திருப்பது குறித்து காவல்துறையிடம் கூறியிருக்கிறார்கள்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.