
அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடித்து வைத்தது.
இனிமேல் தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்று பாபா ராம்தேவும், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணாவும் உறுதி அளித்ததை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில், கடந்த சில மாதங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதஞ்சலி தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதால், பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
மேலும், தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.