
கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக, மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளிவந்துள்ளது.
அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மருத்துவரின் உடலில் உள்ள பல காயங்கள், ஒரு மிருகத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் தலையின் பல பகுதிகள் அதிர்ச்சியடைந்த அறிகுறிகளைக் காட்டின. இரண்டு காதுகளும், உதடுகளும் காயமடைந்தது மட்டுமில்லாமல், கழுத்தில் கடித்த அடையாளங்களும் உள்ளன.
அதுமட்டுமின்றி, அவரது உடலில் 150 மி.கி. உயிரணு இருப்பது தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு கண்டுபிடிக்கப்பட்டது என்பது இந்தக் குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதைக் குறிக்கிறது என்று மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் கருத்தரங்கு வளாகத்தில் பெண் மருத்துவர் ஒருவர், நிர்வாணமாக, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதனையடுத்து, அந்த அறைக்குச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த மருத்துவர், மார்பகப் பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவராகப் படித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவா்கள் மற்றும் முதுநிலை பயிற்சி மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அவா்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆரம்பநிலை மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.