
வங்கதேசத்தில் இந்துக்களும் மற்ற மத சிறுபான்மையினரும் குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும், வன்முறையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுவதற்காக வெளியேறி வருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவைக்கு ஆர்எஸ்எஸ் மனு அனுப்பியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அறிவுசார் குழுவான பிரஜ்ன பிரவாஹா மூலம் அளிக்கப்பட்ட இந்த மனுவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்பட இந்துக்களும் மற்ற மத சிறுபான்மையினரும் வங்கதேசத்தில் குறிவைத்துத் தாக்கப்படுவதால் அங்கிருந்து வெளியேறி வருவதாகவும் அடைக்கலம் தேடிவரும் மக்களுக்குப் பாதுகாப்பான வழிகளை ஏற்படுத்தி, அகதிகள் அனைவருக்கும் மனிதாபிமான முறையில் உதவியை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மனுவில் 3 லட்சம் பேரின் கையெழுத்துகள் போடப்பட்டு மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் -ன் பிரஜ்ன பிரவாஹா குழு உறுப்பினரான மலைக்கா அரோரா பேசுகையில், ”வங்கதேசத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களாக இந்துக்கள் மீதான வன்முறை தொடர்பாக 50 வழக்குகளை ஆவணப்படுத்தியுள்ளோம். இந்த சாட்சியங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.
வங்கதேசத்தில் கடந்த 2022 தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 91 சதவீதமும், சிறுபான்மையினரான இந்துக்களின் மக்கள்தொகை 8 சதவீதமும் இருக்கின்றது. ஆனால், கடந்த 2011-ல் இஸ்லாமியர்கள் 89 சதவீதமும், இந்துக்கள் 10 சதவீதமும் இருந்தனர். இதுபோன்றே மற்ற சிறுபான்மையினரின் எண்ணிக்கையும் அங்கு குறைந்து வருவதாக ஆர்எஸ்எஸ் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு கோரிக்கை வைத்தாலும் இந்திய அரசு வங்கதேச எல்லையில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முறையான ஆவணங்களின்றி நாட்டிற்குள் நுழைவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9 அன்று சுமார் 1,700 வங்கதேச மக்கள் இந்தியாவிற்குள் நுழைய முயன்றதை அமைதியான முறையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூலம் சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டால், வங்கதேச அரசு அந்த நாட்டின் சிறுபான்மையினரைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஆர்எஸ்எஸ் நம்புவதாகக் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.