தங்கப் பதக்கத்தை விடவும்.. வினேஷ் போகத் தாய் நெகிழ்ச்சி
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை விடவும், இந்த நாட்டு மக்கள் அதிக கௌரவத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தாய் தெரிவித்துள்ளார்.
தாயகம் திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது சொந்த கிராமத்தில், அவரை வரவேற்க ஏராளமான மக்கள் கூடியிருக்கிறார்கள்.
புது தில்லி விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர், வினேஷ் போகத்தை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தம் இறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல்எடை கூடுதலாக இருப்பதாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாரீஸிலிருந்து தாயகம் திரும்பிய வினேஷ் போகத்தை வரவேற்க, ஹரியாணாவில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வினேஷ் போகத்தின் தாயார் பிரேமலதா கூறுகையில், வினேஷ் போகத்தை வரவேற்க எனது கிராமம் முழுவதும் மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்களும் இங்கே திரண்டிருக்கிறார்கள். அவரை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்க காத்திருக்கிறோம், அவர்தான் எனக்கு சாம்பியன். தங்கப் பக்கத்தைவிடவும், இந்த நாட்டு மக்கள் அவருக்கு அதிக மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்கள் என்று உணர்ச்சிப்பொங்க கூறுகிறார்.
முன்னதாக, விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பின்போது கண்ணீர் விட்டு அழுத வினேஷ், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றி, நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று கைக்கூப்பி தெரிவித்துக்கொண்டார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி, ஒலிம்பிக் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்த தகவல் வெளியானதிலிருந்து இந்திய ரசிகர்கள் மிகுந்தவேதனை அடைந்தனர். அவருக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்து வந்தனர். பல விளையாட்டு வீரர்களும், சர்வதேச சாம்பியன்களும் கூட வினேஷ் போகத்துக்காக குரல் கொடுத்தனர். அவர் வென்றிருந்தால், பதக்கத்தோடு ஒரு பதக்கமாக மாறியிருக்கும். அவர் வீழ்த்தப்பட்டதால், அவரே ஒரு பதக்கமாக மாறி, நாட்டின் பெருமையாய் உயர்ந்துவிட்டார் என்றே சமூக வலைதளத்தில் மக்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.