
புது தில்லி: இந்திய மல்யுத்த சாம்பியன் வினேஷ் போகத் இன்று காலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தம் இறுதிக்கு முன்னேறிய வினேஷ், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மனம் உடைந்து, மல்யுத்தப் போட்டியிலிருந்தே விலகுவதாக பாரீஸில் அறிவித்திருந்தார்.
பதக்கத்துடன் திரும்புவோம் என்று நினைத்திருந்த வினேஷ் இன்று மனம் உடைந்து தாய் நாடு திரும்பியிருக்கும் நிலையில், விமான நிலையத்தில் மல்யுத்த வீரர்களும் அவரது ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நம்பிக்கையுடன் புது தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தாலும், வினேஷ் போகத் சக வீரர், வீராங்கனைகளைப் பார்த்ததும் கண் கலங்கினார். அவர் கண் கலங்குவதைப் பார்த்த சக வீரர்களும் கண் கலங்கினர். அருகில் இருந்த மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் சொல்லி, இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.
அவருக்கு விமான நிலைய வாயிலில் திரண்டிருந்த ஏராளமானோர் நடனமாடியும் பாடல்கள் பாடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தின் மேல் அமர்ந்து அவர் விமான நிலைய சாலையில் ஊர்வலமாக வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று அவர் பாரீஸிலிருந்து புறப்பட்டார்.
இன்று காலை புது தில்லி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வினேஷ் போகத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங், வினேஷ் போகத்துடன் ஒரே விமானத்தில்தான் தாயகம் திரும்பினார். அவர் நேற்று பாரீஸ் விமான நிலையத்தில் வினேஷ் போகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சாம்பியன் என்று பதிவிட்டிருந்தார்.
அதாவது, பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்துக்கு முதல் சாம்பியனாக வந்தவர் வினேஷ். அவர் இப்போதும் சாம்பியன்தான், பல லட்சக்கணக்கான கனவுகளை ஊக்குவிக்க சில வேளைகளில் ஒலிம்பிக் பதக்கங்கள் தேவைப்படுவதில்லை, பல இளம் தலைமுறையை ஊக்குவித்திருக்கிறீர்கள், உங்கள் தீரத்துக்கு தலைவணங்குகிறேன் என்று பதிவிட்டிருந்தார் ககன் நரங்.
வினேஷ் நாடு திரும்புகிறார், அவரை வரவேற்க தில்லி விமான நிலையம் வாருங்கள், எங்கள் கிராமத்திலும் அவரை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். வினேஷ் போகத்தை சந்திக்கவும் அவரை உற்சாகப்படுத்தவும் காத்திருக்கிறார்கள் என்று வினேஷ் சகோதரர் ஹர்விந்தர் போகத் பதிவிட்டிருந்தார்.