
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 24 வரை கூட்டங்கள் மற்றும் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஷியாம்பஜார் ஐந்து முனை கடக்கும் வரை இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாவும் கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 2023 இன் பிரிவு 223 இன் கீழ் தண்டிக்கப்படுவர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக கடந்த 8-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி, மறுநாள் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். பிரேதப் பரிசோதனையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, பின்னா் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலியல் கொலை தொடா்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேற்கு வங்க மாநிலம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உறைவிட மருத்துவா்களும், பயிற்சி மருத்துவா்களும் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடந்த வாரம் நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஏராளமானோா் மருத்துவமனை முன்பு குவிந்து கோஷங்களை எழுப்பியபடி நள்ளிரவில் திடீரென மருத்துமனைக்குள் புகுந்து நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா். மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அவா்கள் சேதப்படுத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போராட்டக்காரா்களை தடியடி நடத்தி கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த வன்முறைச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.