இந்தக் கதை இப்போது தேவையா? இருக்கட்டுமே, ஓய்வாகப் படித்துதான் பார்க்கலாமே. ஒரு கதையைத் தெரிந்துகொள்வதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது? பணக்காரர் ஆவதென்றால் சும்மாவா?
என்னிடம் 100 சில்லுகள் இருக்கின்றன, பிளாஸ்டிக்தான். சட்டப்படி என்னால் 75-க்கும் அதிகமாகக் கையில் வைத்துக்கொள்ள முடியாது, எனவே 73-ஐ மட்டும் வைத்துக்கொண்டேன். மீதி 27 சில்லுகள் சந்தையில் விற்கப்பட்டுவிட்டன.
15 சில்லுகளை திருவாளர் பொதுஜனங்களைப் போலவே காட்டிக்கொண்டு என்னுடைய நெருங்கிய உறவுக்காரர்களே – சித்தப்பாக்கள் என்று வைத்துக்கொள்வோம் - வாங்கிக்கொண்டனர். இது தப்புதான், என்றாலும் யார் என்னைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்?
ஆக, சந்தையில் 12 சில்லுகள் மட்டும் இருக்கின்றன. இவற்றில் 9 சில்லுகளை எல்ஐசி மாதிரியொரு நிறுவனம் வாங்கிக்கொண்டது. மீதி 3 சில்லுகள்தான் வெளிச் சந்தையில் விடப்பட்டிருக்கின்றன.
என்னுடைய ஊடகங்களும் அரசியல் தொடர்புகளும் மக்கள்தொடர்பு ஏற்பாடுகளும் ஆகப் பிரமாதமானவை. எனக்கு ராஜாவுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக நிறைய கிசுகிசுக்களும் உண்டு.
என்னுடைய சித்தப்பாக்கள், பொதுஜனங்களைப் போலவே தொடர்ந்து, பங்குகளை வாங்குவார்கள், விற்பார்கள், மீண்டும் வாங்குவார்கள், மீண்டும் விற்பார்கள். இதன் மூலம் என்னுடைய பங்குகளுக்கு எக்குத்தப்பான டிமாண்ட் இருப்பதாக நிஜமான பொதுஜனங்களும் நிறுவனங்களும் நம்புமாறு செய்வார்கள், அதாவது அப்படியாகப்பட்ட நிலைமையை உருவாக்குவார்கள்.
ரூ. 2 மதிப்புள்ள பிளாஸ்டிக் சில்லுகள் ரூ. 10-க்கு விற்கப்பட்டன. ரூ. 12, 13, 15 விலைக்கு வாங்க மக்கள் போட்டி போட்டார்கள். என்னுடைய சித்தப்பாக்களோ சில்லு விலையை உயர்த்தினார்கள், ரூ. 100 கொடுத்து வாங்கினார்கள். இப்போது மக்களோ ரூ. 105, 106, 108 விலைக்கு வாங்கப் போட்டி போட்டார்கள். இப்போது சித்தப்பாக்களோ ஒவ்வொன்றையும் ரூ. 500 விலை கொடுத்து வாங்கினார்கள். நம்ம மக்களோ 510, 520 கொடுத்து வாங்க சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள்.
என்னிடம்தான் ஏற்கெனவேயுள்ள 73 சில்லுகளும் அப்படியேதானே இருக்கின்றன. அவற்றின் தொடக்க விலை அல்லது அடக்க விலை ரூ. 2 தானே. ஆனால், இப்போது அதன் சந்தை மதிப்பு ரூ. 520! பொழுதுபோகவில்லை என்றால் பெருக்கிப் பாருங்கள். நம்ம ரேஞ்ச் தெரியும். நிறுத்தாதீங்க. அடுத்து வாங்க.
இப்போது நான் வங்கிக்குச் செல்கிறேன். என்னிடமுள்ள 73 சில்லுகளில் 20-ஐ (ஒவ்வொன்றின் சந்தை மதிப்பும் ரூ. 520) அடமானம் வைத்து, ஒரு சில்லுக்கு ரூ. 300 வீதம் கடன் வாங்கினேன். அதை அப்படியே சித்தப்பாக்களிடம் கொடுத்தேன். அதை வைத்து அவர்கள் மீண்டும் சில்லுகளை வாங்கி, விற்கத் தொடங்கினார்கள். இப்போது விலை ஒவ்வொன்றும் ரூ. 1000!
இப்போது என்னிடமிருந்த இன்னொரு 20 சில்லுகளை மற்றொரு வங்கியில் அடமானம் வைத்து, ஒவ்வொன்றுக்கும் ரூ. 600 கடன் வாங்கினேன். அந்தத் தொகையையும் மறுபடியும் சித்தப்பாக்களிடம் கொடுத்தேன். அவர்கள் மீண்டும் சில்லுகளை வாங்கி விற்கத் தொடங்கினார்கள். இப்போது ஒரு சில்லு விலை ரூ. 1500!
அடுத்து இன்னொரு 20 சில்லுகளை மற்றொரு வங்கிக்குக் கொண்டுபோய் அடமானம் வைத்து ஒவ்வொன்றுக்கும் ரூ. 1000 கடன் பெற்றேன். இப்படியாகக் கொஞ்ச காலத்தில் என்னுடைய 2 ரூபாய் சில்லுகள் எல்லாம் வங்கிகளிடம் அடமானத்தில்! வங்கிகளிலுள்ள உண்மையான பணம் எல்லாம் என்னிடத்தில்!!
இப்போது இந்த உண்மைப் பணத்தைக் கொண்டு என்னால் மற்றவர்களுடன் போட்டி போட்டு எதை வேண்டுமானாலும் - துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிடங்குகள், மின்னுற்பத்தி நிலையங்கள், சிமெண்ட் ஆலைகள் - விலைக்கு வாங்க முடியும்.
இவற்றை வாங்குவதற்கும்கூட மொத்த பணத்தையும் நான் அப்படியே கையில் தர வேண்டும் என்பதில்லை. என் செல்வாக்கின் மீது மதிப்பு வைத்து வங்கிகளே தாங்களாகவே முன்வந்து கடன்களையும் தருகின்றன.
என்ன, இவை எல்லாவற்றுக்கும் ராஜாவின் அனுக்கிரகமும் அரவணைப்பும் ஆசிர்வாதமும் இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அரசின் சொத்துகள் தொடர்ந்து விற்பனைக்கு வரும், நானும் வாங்கிக் குவிக்க முடியும்; அவை எனக்கு இருக்கின்றன.
இந்தக் கதையை எல்லாம் யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் சொல்லி, நம்ம ஊர்க்காரர்கள் எல்லாருக்கும் புரியவைக்க முயலுகிறார் என்றால்... நம்ம ராஜாவுடைய குடிபடைகள் எல்லாமும் திரண்டு இது பெரிய வெளிநாட்டு சதி, ராஜாவைக் கவிழ்க்க முயலுகிறார்கள் என்று கூக்குரலிடாமல் என்ன செய்வார்கள்?
இல்லாவிட்டால் என்னவாகும்? என்னுடைய இன்றைய தங்கச் சில்லுகள் எல்லாம் மறுபடியும் பீஸுக்கு ரெண்டு ரூபாய் என பிளாஸ்டிக் துண்டுகளாக மாறிவிடும் அல்லவா?
கடந்த வாரத்தில் சமூக ஊடகங்களிலும் வலம் வந்தது இந்தக் கதை. கதையைப் படித்துவிட்டீர்கள்தானே, முடிந்தால் முயற்சி செய்யுங்கள், நீங்களும் பணக்காரராகலாம், டாப் 10-ல் வராவிட்டாலும் டாப் 100-ல்!
இனி இந்தக் கதைக்குச் சற்றும் தொடர்பு இல்லாத நம்ம நாட்டு விஷயத்துக்கு வருவோம்.
ஏற்கெனவே கடந்தாண்டு இந்தியப் பங்குச் சந்தைகளில் நடந்த பந்தாட்டங்கள் பற்றி அமெரிக்காவிலுள்ள ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் சில தகவல்களை அம்பலப்படுத்தியது. பங்குச் சந்தையில் ஒரே குழப்பம். அதானி நிறுவனப் பங்குகள் தடதடவெனச் சரிந்தன.
பிறகு இதுபற்றிய விசாரணைகளுக்கு எல்லாமும் உத்தரவிடப்பட்டது. பங்குச் சந்தை நடைமுறைகளைக் கண்காணிக்கும் செபி அமைப்பை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியது. இப்போது என்னடாவென்றால், இந்த செபி அமைப்பின் தலைவராக இருக்கும் மாதவி புச்சுக்கே அதானி தொடர்புடைய நிறுவனத்தில் பங்குகள் இருந்ததாக / இருப்பதாக ஹிண்டன் ரிசர்ச் பரபரப்பான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்துவதுடன், செபி தலைவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
செபி தலைவர் மாதவியும் அதானி குழுமத்தினரும் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன என்று மறுத்துவிட்டனர். மத்திய அரசும் வழக்கம்போல இதையும் கண்டுகொள்ளவில்லை. அதெல்லாம் சரி, உள்ளபடியே எல்லாமும் சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றனவா? யார் சொல்வதெல்லாம் உண்மை?
மொய் என்பதே மெய்!
பொதுவாக நம்ம ஊரில் அந்தக் காலத்தில் கல்யாணத்துக்குச் சென்றால் 50, 100 என்று மொய் எழுதுவார்கள். இப்போதெல்லாம் நாம் வல்லரசுகளில் ஒன்றாக மாறிக் கொண்டிருப்பதால் காசு எல்லாம் மலிஞ்சு போனதிலே, மொய்ப் பணம் மினிமம் 500 என்று தொடங்கி, 1000, 2000 என்றாகிவிட்டது. மதுரைப் பக்கம் சில சமூகங்களில் லட்சங்களிலும்கூட மொய் எழுதுகிறார்கள். சில மாவட்டங்களில் ஆத்திரம் அவசரத்துக்குப் பணம் திரட்டுவதற்கென்றே மொய் விருந்துகளை ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். ஆனால், பாருங்கள், நாட்டுக்கோட்டைப் பகுதியில் மட்டும் ஒரு சமூகத்தில் கல்யாண வீட்டில் 10 காசு, 25 காசு, 50 காசு என்று அதுவும் ஒவ்வொரு குடும்பத்துப் பேரைச் சொல்லி மொய் எழுதுவார்கள் (இது 20, 30 வருஷங்களுக்கு முந்தி, இப்போ எப்படின்னு தெரியல). என்னங்க, நீங்களும் பணக்காரங்க, அவங்களும் பணக்காரங்க, இவ்வளவுதானா மொய் என்று கேட்டால், அப்படி இல்லீங்க, இது வந்ததுக்கு அடையாளம், அவ்வளவுதான் என்பார்கள். இப்போது 10, 25, 50 காசுகள் எல்லாம் செல்லாமல் போயிட்டதால ஒருவேளை 50 ரூபாய், 100 ரூபாய்னு எழுதுகிறார்களோ என்னவோ?
சம்பந்தாசம்பந்தமில்லாமல் எதற்காக இந்த மொய்க் கணக்கு என்றால்...
எல்லாரும் கல்யாண வீட்டுக்குச் சென்றால்தானே மொய் எழுதுவார்கள், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் பலவற்றுக்கு நூறு கோடி, ஆயிரம் கோடி என முதலில் அறிவித்துவிட்டுப் பிறகு வெறுமனே ஆயிரம், இரண்டாயிரம் என மத்திய அரசு மொய் எழுதிவிட்டது. பட்ஜெட் முடிந்ததுமே வெளியிட வேண்டிய திட்ட ஒதுக்கீடுகள் பற்றிய பிங்க் புத்தகம் காலந்தாழ்த்தி வெளியிடப்பட, அறிவிக்கப்பட்ட திட்டங்களே அம்போவாகிவிட்டிருக்கின்றன, எம்.பி.க்கள் எல்லாம் ஊருக்குத் திரும்பிய பின்.
தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு பிங்க் புத்தகத்தில் ரூ. 301 கோடியாக வெட்டிவிட்டார்கள். திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய வழித்தடத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 100 கோடி, புத்தகத்தில் வெறும் ஆயிரம் ரூபாய். அத்திப்பட்டு - புத்தூருக்கு ரூ. 50 கோடியிலிருந்து ஆயிரம் ரூபாய். ஈரோடு - பழனிக்கும் ரூ. 100 கோடிக்குப் பதிலாக ஆயிரம் ரூபாய். சென்னை- மகாபலிபுரம்- கடலூர் கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடிக்குப் பதிலாக ரூ. 1000!
ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை - ஆவடி தடம், காட்பாடி – விழுப்புரம் இரட்டைப் பாதை, சேலம் – கரூர் - திண்டுக்கல் இரட்டைப் பாதை, ஈரோடு - கரூர் இரட்டைப் பாதை எல்லாவற்றுக்குமே ஒதுக்கப்பட்டிருப்பது ஆயிரம் ரூபாய்கள்தான். பேப்பரில் மட்டும்தான் இப்போது திட்டங்கள் உயிருடன் இருக்கின்றன. ம். என்ன செய்ய? நம்பியான் விட்டதே தீர்த்தம்!
ஏற்கெனவே, பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை, பெயரைக்கூட சொல்லவில்லை என்று கோளாறு. ஒலிம்பிக்ஸ் பதக்கங்களுடன் விளையாட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு ஒதுக்கியதையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டினார்கள். தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனைதான். இடித்தவள் புடைத்தவள் இங்கே கிடக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போன கதையாக தமிழ்நாடு, மகாராஷ்டிரம் எல்லாம் வரி வரியென கோடி கோடியாக மத்திய அரசிடம் அள்ளிக்கொடுத்துவிட்டு அவர்கள் கிள்ளிக் கொடுப்பதைக் கொண்டு எல்லாருமாகப் புகைந்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
அண்ணாவும் ஆளுநர் விருந்தும்
சுதந்திர தினத்தில் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயம். தமிழ்நாடு / தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முன்னதாகவே அறிவித்துவிட்டன. அதேபோல கலந்துகொள்ளவுமில்லை. திமுகவும் கலந்துகொள்ளாது என்றார்கள்.
ஆனால், கடைசியில் பார்த்தால் விருந்தில் திமுக கலந்துகொள்ளவில்லையாம். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டார்களாம். முதல்வரும் அவரே, திமுக தலைவரும் அவருதானுங்களே என்று அப்பாவியாக யாராவது கேட்டால்...
‘அரசியல் கருத்துகள் என்பது வேறு, அரசினுடைய நிலைப்பாடு என்பது வேறு. ஆளுநரின் கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்ற பதவியின் மீது, அந்தப் பொறுப்பின் மீது முதல்வர் பெரும் மதிப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசினுடைய நிலைப்பாடு என்னவென்றால், அவருடைய பதவிக்கு, பொறுப்பிற்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் ஆளுநர் கொடுத்திருக்கிற அழைப்பை ஏற்று விடுதலைத் திருநாள் தேநீர் விருந்தில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கிறார்கள்’ என்றொரு விளக்கத்தைத் தந்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. விருந்தைப் புறக்கணித்த கூட்டணிக் கட்சிகளுக்கு விளக்கம் புரிந்தால் சரி. ஆமாம், ஆளுநர் பதவி பற்றி அண்ணா என்னவோ சொன்னார் என்று அடிக்கடி சொல்வார்களே!
திருவாய் மலர்ந்தருளும் டிரம்ப்!
சரி, உலகத்துக்கெல்லாம் பெரிய அண்ணன் வீட்டில் நடக்கிறதைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் நாடு தழுவிய அளவிலும் சரி, மாகாணங்களிலும் சரி, சமீபமாக வெளிவரும் கருத்துக் கணிப்புகள் எல்லாவற்றிலும் டொனால்ட் டிரம்ப்பைவிட சற்று முன்னணியிலேயே இருக்கிறார் கமலா ஹாரிஸ். அதனால்தானோ என்னவோ, இப்போதெல்லாம் அவருடைய கட்சிக்காரர்களே அதிர்ச்சியடையும் வகையில் – கமலாவுக்கு எதிராக - கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
இப்போதைக்கு (இனி வரும் வாரங்களில் என்னென்ன சொல்லப் போகிறார் என்பது அவருக்கேகூட தெரியாது) டொனால்ட் டிரம்ப் உதிர்த்தவற்றின் உச்சம், தனிப்பட்ட ஒரு கூட்டத்தில் கமலா ஹாரிஸை ‘ப*றி’ என்று குறிப்பிட்டதுதான்.
இந்தச் ‘சிறப்பு உரை’யை ‘நியூ யார்க் டைம்ஸ்’ இதழோ மக்களுக்கும் தெரியுமாறு செய்தியாக்கிவிட்டது. ஏற்கெனவே, பொதுவெளியிலேயே dumb - பேசத் தெரியாதவர், incompetent – போட்டியிடத் திறமையற்றவர், low IQ – நுண்ணறிவுத் திறன் குறைந்தவர் என்றெல்லாம் கமலாவுக்குப் புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கும் டிரம்ப், இன்னும் கொஞ்ச நாளில் நாயே, பேயே என்ற ரேஞ்சுக்கு இறங்கிவரவும் நேரிடலாம். நம் ஊரு எவ்வளவோ தேவலாம் போல.
பிரசாரக் கூட்டங்களில் அதிகளவிலானோர் திரண்டிருப்பதைப் போல செய்யறிவைப் பயன்படுத்திக் காட்சிகளை கமலா ஹாரிஸும் ஜனநாயகக் கட்சியினரும் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ள டிரம்ப், அவருடைய தீவிர ஆதரவாளராகத் தற்போது திகழும் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் சுமார் இரண்டு மணி நேரம் அவருக்குப் பேட்டியொன்றையும் அளித்தார், வழக்கம்போல உலகம் முழுவதுமிருந்து சிறைகள், மனநலக் காப்பகங்களில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பன போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன். இத்தனைக்கும் சமூக ஊடகங்களைக் கழுவி ஊற்றித் தவிர்த்துவந்தவர் டிரம்ப்.
இன்னொரு விஷயமும் அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. அதிபர் போட்டியிலிருந்து விலகியவரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடனுக்கு எதிராக ஒரு ‘கலகத்தை’ கமலாவும் அவருடைய ஆதரவாளர்களும் மேற்கொண்டனர்; என்பதுடன், வாக்காளர் மோசடி, சட்டவிரோத வாக்குகள், செய்யறிவு திரட்டிய கூட்டம் போன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைக்கிறார் டிரம்ப்.
விடாமல் இவற்றைத் திருப்பித் திருப்பி டிரம்ப் கூறிவரும் நிலையில், வரும் நவம்பர் தேர்தலில் தாம் தோற்றுப் போனால், தேர்தல் முடிவுகளையே நிராகரிக்கத் தேவையான அடித்தளங்களை டொனால்ட் டிரம்ப் உருவாக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் அச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. அடுத்துவரும் வாரங்களில் இன்னமும்கூட வெப்பம் ஏறலாம்.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...
மலையாளத்தில் மனோரதங்கள் என்றொரு வெப் தொடர் வந்திருக்கிறது. தமிழ் உள்பட பல மொழிப் பதிவுகளிலும் காணக் கிடைக்கிறது. தொடரில் என்ன ஸ்பெஷாலிட்டி என்றால் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய 9 சிறுகதைகளைப் படமாக்கியிருக்கிறார்கள். எடுத்தால் கீழே வைக்காமல் புத்தகத்தைப் படித்துவிடலாம் என்பார்களே, அதுபோல தொடங்கினால் ஒருசேர பார்த்து முடிக்கத் தோன்றுகிறது இந்தத் தொடரையும்.
சராசரியாக 45 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தப் படங்களில் பெரிய பெரிய இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒவ்வொரு சிறுகதையிலும் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்கள், மோகன்லால், மம்மூட்டி, ஃபகத் ஃபாசில், நெடுமுடி வேணு எல்லாம். பிஜு மேனன், பார்வதி திருவோத்து, நரேன், ஆசிப் அலி என நட்சத்திரப் பட்டாளம்.
பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. அந்தச் சிறுகதைகளுடைய தேர்வும்கூட. கமல்ஹாசனே வந்து ஒவ்வொரு கதைக்குமாக அறிமுகம் வேறு தருகிறார் மலையாளத்தில். 91 வயதாகிற எழுத்தாளர் எம்.டி.யை என்னமா கொண்டாடியிருக்காங்க.
ஸ்வர்க்கம் திறக்குன்ன நேரத்தைப் பார்க்கும்போது அப்படியே புதுமைப்பித்தனோட செல்லம்மாள்தான் நினைவு முழுவதும். காழ்ச்ச பார்க்கும்போது, அதுவும் பார்வதி திருவோத்து நடிப்பதைப் பார்க்கும்போது எத்தனையோ கதைகள். காசு பணமிருந்தால் இந்தப் பார்வதிய நடிக்க வச்சு தி. ஜானகிராமனோட மரப்பசு நாவலைப் படமாக எடுக்க வேண்டும். அச்சு அசலா அம்மணி ஞாபகந்தான் வருகிறது. என்னமா நடிக்கிறாங்க. பிறகு அந்த இந்திரன்ஸ், என்னா மனுஷன்? தொடர்ல இந்த ரெண்டு பேருமா சேர்ந்து மோகன்லால், மம்மூட்டியவே காணாமலாக்கிவிட்டார்கள் என்றுகூட சொல்லலாம். ஒருவரை எப்படிப் போற்ற வேண்டும் என்பதற்காகவாவது அவசியம் இவற்றை எல்லாரும் பார்க்க வேண்டும்.
ஏம்ப்பா, இங்கெல்லாம் அதான் தமிழ்ல இப்படி ஏதாவது யோசிச்சுப் பார்க்க ஏலுமா? இங்கில்லாத எழுத்தாளர்களா? என்னத்த மதிச்சு, என்னத்த இவர்கள் படமெடுத்து... அது சரி, ஆறு நெறைய வெள்ளம் போனா மட்டும் என்ன, நாய்க்கு சளப்புத் தண்ணிங்கற மாதிரி நாம இப்படியே டம்மி துப்பாக்கிய வச்சு சுட்டுக்கிட்டே இருப்போம்.