நம்ம ஊர் கவுன்சிலர் தேர்தலைவிட மோசமான ரேஞ்சில் சென்றுகொண்டிருக்கிறது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம். இங்கேதான் பேசிப்பேசி சொற்களால் ஊரை மணக்கச் செய்வார்கள் என்றால் அமெரிக்காவிலும் பேசிப் பேசி உலகத்தையே மணக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும்தான் வேட்பாளர்கள் என்று உறுதியானதுமே சகட்டுமேனிக்கு ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருந்தார்கள்.
ஜோ பைடனுடைய வயதும், அவ்வப்போது தலைகாட்டும் அவருடைய மறதியும் பேச்சுக் குழறலும் டிரம்ப்புக்கு மிகவும் வசதியாக இருந்தது. உள்ளபடியே சொல்லப் போனால் இருவருமே வயதானவர்கள்தான். என்ன, பைடனுக்கு 3 வயது அதிகம், 81. டிரம்புக்கு 78, அவ்வளவுதான். ஆனால், பைடன் கொஞ்சம் அவ்வப்போது தடுமாறுவார்.
இதைச் சொல்லியே ஜெயித்துவிடலாம் என டிரம்ப் நினைத்துக் கொண்டிருந்திருப்பார் போல. அவர் நினைத்ததைப் போல ஒரு வாய்ப்பும் வந்தது. நல்லதற்கா, கெட்டதற்கா எனத் தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக பைடனே அழைப்பு விடுக்க, இரு வேட்பாளர்களுக்கும் இடையே நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் ரொம்பவுமே சொதப்பிவிட்டார் ஜோ பைடன் (இதேபோல, நம்ம நாட்டிலேயும் மக்களவைத் தேர்தலின்போது ஒரு நேருக்கு நேர் சவாலும் பிறகு சப்தமில்லாமல் அது அடங்கிப் போனதும் எல்லாருக்கும் தெரிந்ததே. நடந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்). இத்தனைக்கும் இந்த விவாதத்தில் டிரம்ப் குறிப்பிட்டவற்றில் அல்லது அள்ளிவிட்டவற்றில் பல விஷயங்கள் டுமீல்கள்தான் என்று பிறகு ஃபேக்ட்செக் வழி எல்லாரும் கழுவி ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஆனாலும், நெட் ரிசல்ட், விவாதமே விவாதப் பொருளாகி ஜனநாயகக் கட்சிக்காரர்களே ஜோ பைடனைக் கழற்றிவிட்டுவிட வேண்டியதுதான், இல்லாவிட்டால் கதை கந்தலாகிவிடும் என்று அஞ்சத் தொடங்கியதுடன் மட்டுமின்றி அடுத்து ஆக வேண்டிய வேலையையும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
பரவாயில்லை, இப்போதேனும் நம்ம வேட்பாளரை மாற்றிவிடுவோம். இல்லாவிட்டால் இவற்றையே சொல்லி எளிதாக டிரம்ப் வெற்றி பெற்றுவிடுவார் எனத் திட்டமிட, யாருடைய நல்ல நேரமோ, பைடனுக்கு கரோனா தொற்றுக் காய்ச்சல் வந்தது. அவருடைய வீட்டிலும் வேண்டாம், மதிப்பாகவே விலகிவிடலாம் என்றிருப்பார்கள் போல. வீம்புக்காகப் போட்டி போட வேண்டாம் என்று நினைத்த அதிபர் ஜோ பைடனும் திடீரென இந்தத் தேர்தலில் தாம் போட்டியிடாமல் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். கூடவே, அதிபர் வேட்பாளருக்குத் தம்முடைய தெரிவு, தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ்தான் என்றும் அறிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி ஏற்காது என்றொரு நினைப்பு இருந்தது. அதற்கேற்றாற் போல தொடக்கத்தில் கமலா ஹாரிஸுக்கும் டிரம்ப்புக்குமான ஆதரவில் கொஞ்சம்தான் வேறுபாடு இருந்தது. ஆனால், எல்லா தடங்கல்களையும் தாண்டி பைடன் சொன்னபடியே கமலாதான் வேட்பாளர் என்பதில் ஜனநாயகக் கட்சியினர் இப்போது திடமாகிவிட்டனர்.
டிரம்ப்பைவிட கமலாவுக்கு ஆதரவு பெருகத் தொடங்கியிருக்கிறது. இருக்கிற ஆதரவுடன் கறுப்பின மக்களின் ஆதரவும் சேர எளிதில் கமலா வெற்றி பெற்றுவிடுவார் என்கிற மாதிரி நிலைமை மாற, பார்த்தார் டிரம்ப். இதென்னடா, புதுக் கழுதையாக (ஜனநாயகக் கட்சியின் சின்னம், அவ்வளவுதான்!) இருக்கிறதே என்று ஹாரிஸை நோக்கி ஸ்ட்ரெய்ட்டாக பந்து வீசத் தொடங்கிவிட்டார்.
உலகத்தின் டாப் வல்லரசுக்கு அதிபராகப் போகிறவர்கள் பேசுகிற பேச்சு மாதிரி இல்லை, இவர்கள் பேசிக் கொண்டிருப்பது, இல்லை, மேடையில் உரையாற்றிக் கொண்டிருப்பது. நம் நாட்டில் தேர்தல் நேரத்தில் லோகல் பேச்சாளர்கள், இவர் அந்த சாதி, அவர் இந்த சாதி என்று சகட்டுமேனிக்குப் பேசுவது போல தரை லெவலுக்கு இறங்கி டொனால்ட் டிரம்ப், கமலாவின் இனத்தைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்துவிட்டார்.
சிகாகோவில் கறுப்பின பத்திரிகையாளர்கள் இடையே பேசிய டிரம்ப், ‘ரொம்ப காலமாக எனக்கு அவரைத் தெரியும். மறைமுகமாக. நேரடியாக என்று சொல்ல முடியாது. அவர் எப்போதுமே இந்திய பாரம்பரியத்துக்காரர்தான். இந்திய பாரம்பரியத்தைத்தான் ஊக்குவிப்பார். அவர் கறுப்பராக மாற நேர்ந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் எனக்கு அவர் கறுப்பர் என்றே தெரியாது. ஆனால், இப்போ அவர் கறுப்பராக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஆக, எனக்குத் தெரியவில்லை, அவர் இந்தியரா அல்லது கறுப்பரா?
“இவர்களில் யாராக இருந்தாலும் மதிக்கிறேன். ஆனால், அவர் அப்படியல்ல. ஏனெனில், அவர் எப்போதுமே இந்தியர்தான். திடீரென்று ஒரு நாள் அவர் கறுப்பராக மாறிவிட்டார்” என்று விஷமாகக் கக்கித் தள்ளிவிட்டார்.
கமலாவுடைய அம்மா தென் இந்தியாக்காரர் (தஞ்சை டெல்டாவிலிருந்து சென்னை வந்தவர்கள், அப்படியே பிறகு அமெரிக்கா போனவர்), அப்பா ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இரு பாரம்பரியங்களின் மீது பற்றுக்கொண்டிருந்தாலும் சின்ன வயதிலிருந்தே எப்போதும் கறுப்பராகவே கமலா தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கிறார். காலங்காலமாகக் கறுப்பர்களுக்கானதாகக் கருதப்படும் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில்தான் அவர் படித்தார். தமிழ்நாட்டுக்கும் வருவார், ஜமைக்காவுக்கும் செல்வார் (தமிழும் பேசத் தெரிந்திருக்குமா?).
டிரம்ப் கொளுத்திப் போட்டதுமே அவருடைய சமூக ஊடகக் குழுக்கள் எல்லாமும் வரிந்துகட்டிக்கொண்டு, கமலா ஹாரிஸ் இந்தியர்தான், கறுப்பர் அல்ல என்று சித்திரிக்கும்படியாக அவருடைய பழைய படங்களை எல்லாம் பரப்பத் தொடங்கிவிட்டனர். போலியானவர், சந்தர்ப்பவாதி என்றெல்லாமும் தூற்றுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜே.டி. வேன்ஸோ, கமலா ஹாரிஸ் ரொம்ப போலியானவர், கனடாவில் வளர்ந்தவர் என்றெல்லாமும் தாக்கத் தொடங்கிவிட்டார். என்ன கொடுமை என்றால், அமெரிக்கரான இவருடைய மனைவி உஷா வேன்ஸும்கூட இந்தியாவை (ஆந்திரத்தை) பூர்விகமாகக் கொண்டவர்தான். சற்று உழைக்கிறவர்களுக்கு சார்பானவராக அறியப்படும் இவரை, சில மாகாணங்களில் முன்னிறுத்துவதன் மூலம் தனக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற முடியும் என்பதால் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர்களில் ஒருவரும் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபருமான பராக் ஒபாமாவின் அப்பாகூட கென்யாக்காரர்தான். அம்மாதான் அமெரிக்க வெள்ளையினத்தவர். அமெரிக்காவில் இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இனத்தை முன்வைத்துப் பேசுவதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று இவர்களுக்கெல்லாம் தெரியாமலா இருக்கும்? என்ன செய்ய அரசியல், அதுவும் அதிபர் பதவிக்கு, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அல்லவா?
கமலா ஹாரிஸையும் பெண் என்பதற்காக எகத்தாளமாகப் பேசுகிறார், எப்போதுமே பெண்கள் என்றால் தாழ்வாகவே கருதுகிற டிரம்ப். அவர் ஒரு விளையாட்டு பொம்மை, அவர் அதிபரானால் உலகத் தலைவர்கள் எல்லாம் அவரைப் பார்ப்பார்கள், அப்படியே கடந்துபோய்விடுவார்கள். அவர் விளையாட்டுப் பொம்மையைப் போலதான் இருப்பார் என்றும் நக்கலடித்திருக்கிறார்.
கமலா ஹாரிஸ் என்னவோ பதற்றமடையாமல் மிகவும் நிதானமாகவே தேர்தலை அணுகுவது போலத் தெரிகிறது. டிரம்ப்பினுடைய ‘புகழ்பெற்ற’ பேச்சுகளையே அவருக்கு எதிராகத் திருப்பிவிடுகிறார். அட்லான்டாவில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் என் முகத்துக்கு முன் நின்று சொல்லுங்கள் என்று ஒரு விவாதத்துக்கும் சவால் விடுத்திருக்கிறார். கமலாவுக்கு 59 வயது! இப்போது களத்தில் டிரம்ப்தான் ஓல்ட் மேன், கமலாவைவிட கிட்டத்தட்ட 20 வயது அதிகம்.
கமலாவுடைய நிதானம்தான் இப்போது டிரம்ப்பை ரொம்பவுமே தூண்டிவிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. கறுப்பர்களுக்கு ஒருக்காலும் உதவக் கூடியவர் அல்ல என்றாலும் கறுப்பர்கள் வாக்குகளைக் கைப்பற்றுவதற்காகக் குழைந்துகொண்டிருக்கும் டிரம்ப்பும் டிரம்ப் ஆதரவாளர்களும், எப்படியாவது கமலா ஹாரிஸ் கறுப்பர் அல்ல, இந்தியர் என்று மக்களை நம்பவைத்துவிட வேண்டும் என்று (ஆளைப் பார்த்தாலே தெரிகிறதே? பிறகு எப்படி மாற்றுவது? ம்) படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் கறுப்பர் வாக்குகள் போய்விடுமாம்.
கமலா ஹாரிஸ் தன்னுடைய அம்மா ஊரான சென்னைக்கு வந்திருந்தபோது, சேலை கட்டி, தாத்தா, பாட்டி, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஒரு பழைய படத்தை டொனால்ட் டிரம்ப் திடீரென்று சமூக ஊடகங்களில் வெளியிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய இந்த நல்ல படத்துக்கு நன்றி கமலா. இந்திய பாரம்பரியத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கிற நட்பும் அன்பும் பாராட்டத் தக்கது என்று குறிப்பிட்டிருக்கிறார். கலாய்க்கிறாராம்! உடனே, டிரம்ப் காட்டிய வழியில் கமலாஇஸ்இந்தியன், ஃபேக்பிளாக் என்றெல்லாம் ஹேஷ்டேக் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
இதற்கு நடுவே டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் நன்கொடையாளருமான எக்ஸ் தள அதிபர் எலான் மஸ்க்கோ, தன்னறிவுடன் செய்யறிவையும் பயன்படுத்தி, கமலாவின் குரலை மாற்றிப் பதிந்து பதிவேற்றியதில் ஒரே களேபரம்.
அதிபர் தேர்தலுக்கு இன்னமும் முழுதாக மூன்று மாதங்கள் இருக்கின்றன. நவம்பர் மாதம் 5 ஆம் தேதிதான் வாக்குப் பதிவு. இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் அங்கே காட்டப் போகிறார்களோ? பார்க்கப் போகிறோமோ? கதைக்கு ஆகாது என்றாலும் அதுவரைக்கும் நல்ல என்டர்டெயின்ட்மென்ட் மேட்டராக டொனால்ட் டிரம்ப் இருப்பார் என நம்பலாம்.
[ஆமாம், இதையெல்லாம் படிக்கும்போது டிரம்ப் எல்லாம் ஒரு ஆளா? என்று நம்மூர்த் தலைவர்களில்கூட சிலர் நினைவுக்கு வரக் கூடும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள், வாய்ப்புக் கிடைக்கும்போது பட்டியலைச் சரிபார்த்துக் கொள்ளலாம்].
* * *
என்ன இருந்தாலும்...
பலத்த மழை பெய்தால் கோவில்கள் போன்ற பல நூற்றாண்டுப் பழங்கால கட்டுமானங்களில் சில நேரம் ஒழுகும். ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் ஒழுகும். இப்போதெல்லாம் கான்கிரீட் வந்துவிட்டதால் கட்டடங்கள் ஒழுகுவது பழங்கதையாகிவிட்டது. அடுத்த லெவலில் இப்போது அபார்ட்மென்ட்கள் வேறு வந்துவிட்டன (என்ன, அங்கங்கு உதிரும்!). அப்படியிருக்க, பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் வடிவமைக்க, பிரதமர் நரேந்திர மோடியே பிளானையும் வேலையையும் மேற்பார்க்க ரூ. 970 கோடி செலவில் கட்டி, நாடே கூடித் திருவிழாவாகக் கொண்டாடித் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஒரு நாள் மழைக்கே ஒழுகினால்... (அப்படியே திரும்பிப் பாருங்கள், அந்த பழைய நாடாளுமன்றக் கட்டடம் ஒரு மாதிரி நக்கலாகச் சிரித்துக்கொண்டு கல்லு மாதிரி நிற்கிறது!).
மழை நீர் ஒழுகும் காட்சி சமூக ஊடகங்களில் டிரெண்டானதில் ஆச்சரியமில்லை. அந்தக் காட்சியில் தண்ணீர் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அந்த நீல நிற பிளாஸ்டிக் டப்பாதான் ரொம்பவே பாயின்ட் ஆப் அட்ராக்.ஷன்! அந்தக் காலத்தில் வீடுகளில் ஒழுகினால் பண்ட பாத்திரங்களை வைப்பார்கள். ஆயிரம் கோடி கட்டடத்துக்கு ஒரு வெள்ளி அண்டாவாவது வைத்திருக்க வேண்டாமா?
* * *
பயங்கரம்தான் வரி!
மாதாமாதம் ஜி.எஸ்.டி. வசூலில் அந்த லெவல், இந்த லெவல், மெகா சாதனை என்று கோடிகளில் கூச்சல் பொறி பறக்க, நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியோ டேக்ஸ் டெரரிசம் – வரி பயங்கரவாதம் என்று சாடினார்.
இதற்கு நடுவிலேதான், இந்தியாவுல யாருங்க வரி கட்டுறாங்க? என்று கடந்த ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்பாம் அறிக்கையொன்றைச் சுற்றுக்குவிட்டிருக்கிறார்கள் ஊடகவாசிகள், அதாவது வாசிப்பாளர்கள்.
‘பெரும் பணக்காரர்கள் பிழைத்திருத்தல்: இந்தியாவின் கதை’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் ஏதோ மிகச் சிலர்தான் பெருமளவு வரி கட்டுகிறார்கள் என்ற ‘கதைக்கு’ மாறாக, நாட்டின் மக்கள்தொகையின் அடிமட்டத்திலுள்ள 50 சதவிகித ஏழை எளிய மக்கள்தான் மூன்றில் இரு பங்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கட்டுகின்றனர் என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.
மொத்த ஜிஎஸ்டி வருவாயில் மூன்றில் இரு பங்கிற்கு சற்றே குறைவாக 64.3 சதவிகிதத்தை அடித்தட்டிலிருந்து 50 சதவிகித மக்களே (வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பரிமாற்றங்களின் மூலம்) செலுத்துகின்றனர். மூன்றில் ஒரு பங்கை நடுத்தரத்திலுள்ள 40 சதவிகித மக்கள் செலுத்துகின்றனர். மீதியுள்ள வெறும் 3 முதல் 4 சதவிகித வரியை மட்டுமே நாட்டின் 10 சதவிகிதமான பெரும் பணக்காரர்கள் செலுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அது சரி, யார் செலுத்தினால் என்ன? வரி வரிதான், பணம் பணம்தான். இலக்கு, வசூல், வெற்றி!
* * *
95% சாதனை!
டிஜிடல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமான கிராமங்கள் இணைய வசதியை, 3ஜி / 4ஜி வசதியைப் பெற்றுவிட்டதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் 6 லட்சத்து 44 ஆயிரத்து 131 கிராமங்களில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 952 கிராமங்களுக்கு இணைய வசதி கிடைத்துவிட்டிருக்கிறதாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
அப்படியே, எத்தனை சதவிகித கிராமங்களுக்குக் கழிப்பறை வசதிகள் கிடைத்திருக்கிறது? எத்தனை சதவிகித கிராமங்களுக்குக் குடிநீர் வசதி கிடைத்திருக்கிறது? எத்தனை சதவிகித கிராமங்களுக்கு மருத்துவமனை வசதி கிடைத்திருக்கிறது? எத்தனை சதவிகித கிராமங்களுக்கு பள்ளிக்கூட வசதி கிடைத்திருக்கிறது? என்பதையும்கூட சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தெரிவித்தால் நன்றாகத்தானே இருக்கும். ஆமாம், இணையத் தொடர்பு என்பது வசதிதான், மற்றவையெல்லாம் வசதியா? அடிப்படைத் தேவையா? கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.
•